நாம் யாரிடமாவது உதவிக் கேட்கும்போது அதை அவர்கள் செய்ய மறுத்தால், நம் மனதில் அது கோபத்தையோ அல்லது மனக்கசப்பையோ ஏற்படுத்துவதுண்டு. ‘நாம் அவர்களுக்கு உதவி செய்தோமே? இப்போது நம்மிடம் இல்லை என்கிறார்களே!’ என்பது போன்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனால், சில சமயங்களில் சூழ்நிலை, காலநேரம் போன்ற காரணத்தால் கூட அவர்கள் உதவி செய்ய மறுத்திருக்கலாம். இதை சரியாக புரிந்துக் கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு ஊரில் உள்ள ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தது. அப்போது ஒரு குருவி முதல் மரத்திடம், 'மழைக்காலம் வரப்போகிறது. நான் உன்னிடம் ஒரு கூடு கட்டிக்கொள்ளவா?' என்று கேட்கிறது. அதற்கு அந்த மரமோ, ‘முடியாது’ என்று மறுத்துவிடுகிறது.
இப்போது குருவி இரண்டாவது மரத்திடம் கூடுக்கட்டிக்கொள்ளவா? என்று கேட்கிறது. அந்த மரம் 'சரி' என்று சம்மதிக்கிறது. இதனால் குருவி தன்னுடைய குஞ்சுகளுடன் இரண்டாவது மரத்தில் கூடுக்கட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.
ஒருநாள் அந்த ஊரில் பயங்கரமான மழை பெய்கிறது. அன்றைக்கு பெய்ந்த மழையில் ஆற்றிலே வெள்ளம் உருவாகி அந்த முதல் மரத்தை அடித்துச் செல்கிறது. அதை பார்த்த அந்த குருவி, ‘நான் கூடுக்கட்ட வந்தபோது எனக்கு இடம் தரவில்லைதானே? உனக்கு நன்றாக வேண்டும்’ என்று கூறியது.
அதற்கு அந்த மரம் சொன்னது, ‘நான் பல வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். முன்பு இருந்ததுப்போல பலம் எனக்கு இப்போது இல்லை. இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் நீ கேட்கும் போது முடியாது என்று சொன்னேன். இப்போது நீயும் உன்னுடைய குஞ்சுகளும் நன்றாக உள்ளீர்கள். அதுவே எனக்கு போதும்’ என்று கூறியது அந்த முதல் மரம்.
இதே மாதிரி தான் நாமும் யாரிடமாவது உதவி கேட்கும் போது அவர்கள் முடியாது என்று கூறிவிட்டால், நாம் அவர்களை தப்பாக நினைக்க வேண்டாம். ஏனெனில், வெளியிலிருந்து பார்க்கும் போது, ‘அவங்களுக்கு என்ன நல்லா தானேயிருக்கிறார்கள்?’ என்று தோன்றும். ஆனால், அவர்களுடைய வலி, அவர்களின் நிலைமை அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே ஒருவர் உதவி செய்ய மறுத்தால் அவரைப்பற்றி தவறாக எண்ணாமல் அவர்களின் நிலையைப் புரிந்துக்கொண்டு வந்துவிடுங்கள்.