Motivation Image
Motivation Image Image credit - pixabay.com
Motivation

வருங்காலத்தை வளமாக்கும் வாசிப்பு பழக்கம் உள்ளவரா நீங்கள்? வெற்றி உங்களுக்கே!

சேலம் சுபா

நீங்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவரா? உங்கள் நேரங்கள் விலைமதிப்பற்றவை. ஏனெனில் அறிவுப் பொக்கிஷத்தின் சாவி உங்களிடம். ஆம். நீங்கள் படிக்கும் புத்தகத்தில் உள்ள ஒரு நல்ல கருத்து பலருக்கும் செல்லும் போது நல்ல விதைகள் விதைக்கப்படுகிறது. நல்ல கருத்துகளை உள்வாங்கும் மனம்தான் வெற்றிக்கு அடித்தளமாகிறது.

வாசிப்பு பழக்கம் இருந்த வெற்றியாளர்கள் பற்றி வரலாறு பதிவு செய்தவைகளில் இருந்து சில…

தான் தூக்கு கயிற்றின் மூலம் கொல்லப்பட போகிறோம் என்று அறிந்தும் முதல் நாள் வரை படித்துக் கொண்டிருந்தவர்தான் பகத்சிங்.

தன் அறுவை சிகிச்சையை கூட அடுத்த நாளைக்கு தள்ளி வைத்தார் அறிஞர் அண்ணா. ஏன் தெரியுமா? தான் படித்த புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும் என்ற காரணத்தால். 

தான் வசிக்கும் அறைக்கு அருகிலேயே நூலகம் அமைய வேண்டும் என்று விரும்பி அவ்வாறு தேர்ந்தெடுத்து பல புத்தகங்களை பல வருடங்கள் படித்து சட்டம் இயற்றி இந்திய அரசியலமைப்பு சட்டங்களை சீரமைத்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர்.

தொடர்ந்து 40 வருடங்களாக பல புத்தகங்களை படித்ததன் மூலம்தான் காரல் மார்க்ஸ் என்பவர் கம்யூனிசத்திற்கான கொள்கைகளை உருவாக்கித் தந்து இன்று பலரின் மனங்களில் வாழ்கிறார்.

புத்தகங்களை நாம் குனிந்து வாசித்து அதில் உள்ள கருத்துக்களை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்போது அது நம்மை தலை உயரச் செய்கிறது. வாசிப்பு பழக்கம் வெறுமனே  மனனம் செய்து வைப்பதற்காக இல்லாமல் வாழ்க்கை காற்றினை சுவாசிக்க உதவும் படியாக இருப்பதுபோல் இருக்க வேண்டும்.

அறிவை பரப்புவதற்கும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினை பெறுவதற்கும் புரிதல் சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

நாம் ஏதாவது ஒன்றை வாழ்க்கையில் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் கல்விக்காக, பின்பு அறிவுக்காக, பின்பு ஞானத்திற்காக. மேலும் வாழ்வதற்கு தேவையான பணத்திற்காக என்றாலும் மன நிறைவுக்காக எப்போதும் புதிது புதியதாக கற்றுக் கொள்ள வேண்டும்.  "புத்தகங்கள் ஒரு மனிதரின் சிறந்த நண்பன்" என்று கூறப்படுகிறது. அவற்றை தினம் வாசித்து கற்றுக் கொள்ள வேண்டியது நம் கடமை.

வாசிப்புக்கு வயது தடையில்லை. ஆர்வமும் தேடலும் இருந்தால் போதும். வாழ்க்கையை ஜெயிக்க இந்த வாசிப்பு பழக்கம் நமக்கு அவசியம் தேவை. ஆசிரியர்கள்  போல நம்மை சீர்திருத்தம் செய்வதில் சிறந்தவை புத்தகங்கள்.  புத்தகங்கள் என்பது நம்மை வெற்றி சிகரம் தொட  ஏணியில் ஏற்றி விடும் பணியை செய்கின்றது. எந்த ஒரு அனுபவத்தையும் நம் முன்னோர்கள் எழுதி வைத்து விட்டு சென்றதால் மட்டுமே இப்போது நம்மால் அதை பின்பற்ற முடிகிறது. அதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்துகொள்ள முடிகிறது.

புத்தகம் எப்போதும் நிலைத்து நின்று பேசும். எழுத்துக்கள் காட்சிப்படுத்தும். அவை பல உணர்வுகளை நமக்குள் வரவழைக்கும். கண்ணீரை தூண்டும். மாற்றம் காணும். நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டும். நிதானமாக வாசித்து மனதில் ஏற்றுக் கொள்ளும் பல கருத்துக்கள்  இறுதிவரை நம்முடன் வரும் என்பது உண்மை.

பல புத்தகங்களில் உள்ள தன்னம்பிக்கை  கருத்துக்களை வாசித்து இன்று வெற்றிகரமான மனிதராக  அறியப்படுபவர்கள் நிறைய பேர். நம்மாலும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்னும் நம்பிக்கையை தருவது புத்தகங்கள். நல்ல கருத்துள்ள அறிவுசார்ந்த   புத்தகங்களை தேடிப் படிப்போம்.

நமது சந்ததியரையும் வாசிக்க வைத்து அவர்களின் வருங்காலத்தை பிரகாசமாக்க உதவுவோம்.  நல்ல புத்தகங்கள் நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தரும் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. நல் ஒழுக்கம் இருந்தால் வெற்றியும் நிச்சயம் தேடிவரும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT