சாதாரணமாக நமது குடும்பங்களில் நடக்கும் நல்லது கெட்டது அனத்திலும் முதலில் பங்கேற்பவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான். யாருக்காவது வீட்டில் உடல்நிலை சரியில்லை என்றால் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள் என்றுதான் கேட்பார்கள். அதேபோல் நெருங்கிய உறவினரிடமும், உன் உறவினருக்கு உடல்நிலை சரியில்லையாமே, நீ சென்று பார்த்தாயா? என்றுதான் கேட்பார்கள். இவையெல்லாம் உணர்த்துவது உண்மையான அன்பைத்தான்.
அன்பு இல்லையேல் உலகத்தில் எதுவுமே இல்லை என்றுதான் கூற வேண்டும். மிகவும் கலக்கமுற்று இருக்கும் நேரத்தில் தெளிவான ஒரு சிந்தனையை அன்பின் மூலம் யார் உணர்த்துகிறார்களோ அவர்கள்தான் அந்த நேரத்தில் தெய்வமாகப் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோர் இதயங்களிலும் அன்பை விதைத்து, ஆறுதலாய் பேசி, தியாகமே வடிவாக அமைந்த ஒருவரின் கதையை இப்பதிவில் காண்போம்.
ஒருமுறை அன்னை தெரசா அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். நியூ ஜெர்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு சோதனையிடும் இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். சோதனை அதிகாரி அவரிடம் ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கிறீர்களா? என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
ஆம்' இருக்கின்றன என்று அன்னை சொல்ல அதிகாரி திடுக்கிட்டுப் போனார். கன்னியர் உடையில் ஆயுதம் தாங்கி வருபவரா என யோசித்த அதிகாரி உங்களிடம் ஆயுதங்களா என்று வியப்புடன் கேட்டார்.
ஆம், ஆயுதங்கள்தான்! பையில் எனது பிரார்த்தனைப் புத்தகங்கள் சில; மனதில் பிறருக்கான ஏராளமான அன்பு... இவையே எனது ஆயுதங்கள்! "என்றார் அன்னை தெரசா அமைதியாக!
நேர்மை, பணம், ஜெபம் இவைகளை விட உலகத்தில் மதிப்பு மிக்கது அன்பு ஒன்றே. நம் வாழ்க்கை அன்புடையாக அமைந்திட வேண்டுமாயின், வாழ்க்கையை இவ்வாறு அழகு படுத்துவோம். அன்பு செலுத்தி வாழ்கின்றபோதுதான் இந்த மானுடம் மிக அழகாய் தோன்றுவதை நம்மால் அனுபவிக்க முடியும். அன்பு இல்லையேல் நம் வாழ்க்கை நரம்பில்லா வீணை போல பயனற்றது. எப்பேற்பட்ட கடினமான உள்ளத்தையும் உருக வைக்கும் மிக உயரிய ஆயுதம் அன்பு ஒன்றே. ஆதலால் அன்பைக் கொடுப்போம்; அன்பையே பெறுவோம்!