motivation Image Image credit - pixabay.com
Motivation

புதிய பார்வை எப்பொழுது ஏற்படும் தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

நாம் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால் முதலில் படிப்பது மேலோட்டமாக இருக்கும். இரண்டாவது முறை படிக்கும் பொழுது ஆழ்ந்து படிக்க ஆரம்பிப்போம். மூன்றாவது முறை அதைப் படிக்க ஆரம்பித்தால் தியானத்தில் மூழ்கி விடுவதைப்போல் அதில் மூழ்கி விடுவோம். முதலில் படித்ததற்கும் மூன்றாவது முறையாக படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகளைக் காணலாம். நமக்கே புதுப்புது ஐடியாக்கள் உருவாகும். அதேபோலத்தான் ஒவ்வொரு முறை  ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்தாலும் அதில் பல புதிய கோணங்கள் தென்படுவதை காண முடியும் என்கிறார் ஜென் குரு. அவர் அதை எப்படி விளக்குகிறார் என்பதை இப்பதிவில் காண்போம். 

ஒரு ஜென் குருவைப் பார்த்து ''நீங்கள் ஞானம் பெறுவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று ஒருவர் கேட்டார். 

நான் காட்டில் மரம் வெட்டினேன். விறகு பிளந்தேன். அதை என் எஜமானர் வீட்டிற்கு சுமந்து வந்தேன். அப்புறம் என் எஜமானர் வீட்டிற்கு தண்ணீர் சுமந்தேன் என்றார் குரு.

இப்போது ஞானம் பெற்றபின் என்ன செய்து வருகிறீர்கள்? என்று கேட்டார் அவர். மரம் வெட்டுகிறேன். தண்ணீர் சுமக்கிறேன். அதே வேலைதான் என்றார் குரு. 

கேட்டவருக்கு வியப்பு. ''முன்பும் அதே செய்தீர்கள். ஞானம் பெற்ற பின்பும் அதே செய்கிறீர்கள் என்ன வித்தியாசம்?"

குரு சிரித்தார். வித்தியாசம் இருக்கிறது. அது எல்லை இல்லாதது. முதலில் நான் ஒரு பிரக்ஞையும் இல்லாமல் மரம் வெட்டினேன். என்னைச் சுற்றி என்ன இருக்கிறது என்பதை நான் ஒரு நாளும் கவனித்ததில்லை. இப்போதும் அதே வேலை செய்தாலும், நான் அதே ஆள் அல்ல. என் பார்வை பழைய பார்வை அல்ல. என் இதயத்துடிப்பும் கூட மாறிவிட்டது. எல்லாவற்றிலும் ஒரு ஒத்திசைவு இருப்பதை நான் உணர்கிறேன். 

நான் தண்ணீர் எடுப்பதும் அதே கிணற்றிலிருந்துதான். ஆனால் எனது உள்ளம் முற்றிலும் மாறிவிட்டது. நான் புதிய மனிதன். நான் புதுப் பிறவி எடுத்துள்ளேன். நான் எதையும் இப்போது ஆழமாக பார்க்க முடியும். ஒவ்வொரு கூழாங்கற்களும் எனக்கு ஒரு வைரமாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு பறவையின் பாடலும் ஆண்டவனின் அழைப்பு போலத் தோன்றுகின்றது. 

ஒரு மலர் பூக்கும்போது கடவுளே எனக்காகப் பூத்தது போல் தோன்றுகிறது. மக்களின் கண்களைப் பார்க்கும்போது எனக்குக் கடவுளின் கண்களைப் பார்ப்பது போல் தோன்றுகிறது. வெளித்தோற்றத்தில் நான் அதே வேலைகளைச் செய்து வந்தாலும், உலகம் அதே உலகமும் அல்ல. நானும் பழைய ஆளல்ல என்றார் குரு. 

ஒருவர் விழிப்புணர்வு பெறும்போது அவர் பார்வை மாற, உலகமும் முற்றிலுமாக மாறிவிடுகிறது. செய்யும் செயல்களுக்கு புதிய அர்த்தமும் புதிய கனமும் ஏற்பட்டு விடுகிறது. 

இதைத்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்கிறார்கள். தவத்தொழில் செய்து தரணியை காப்பாய் என்கிறார் பாரதி. நாம் எதை செய்தாலும் அதில் ஆழ்ந்து அனுபவித்து செய்தால்  அதில் ஒத்திசைவு  ஏற்படும். அதிலிருந்து விழிப்புணர்வு கிடைக்கும்  என்பதை புரிந்து கொள்வோம். அதன் வழி நடப்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT