நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்களை, ‘இது இப்படித்தான் இருக்கும்’ என்று எண்ணி அதை எடை போடுவதுண்டு. அதற்குப் பின் இருக்கும் உண்மையை நாம் ஆராய விரும்புவதில்லை. நமக்கு முழுமையாக தெரியாத ஒரு விஷயத்தை எடை போடுவது என்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்துக் கொள்ள இந்த குட்டிக் கதையை கேளுங்கள்.
ஒருமுறை விமானத்தில் 24 வயதுடைய இளைஞன் அவன் தந்தையுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறான். அந்த இளைஞன் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து கொண்டு மிகவும் ஆர்வத்துடன் வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அப்பா, ‘அந்த மேகத்தைப் பாருங்கள் நம் அருகில் மிதக்கிறது’ என்று சத்தமாக கூறினான். அதற்கு அவன் தந்தையும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே ‘ஆமாம்’ என்கிறார். அதை அவன் அருகே அமர்ந்து வந்தவர்களும் பார்த்து கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு இந்த பையன் நடந்துக்கொள்வது சுத்தமாக பிடிக்கவில்லை. ‘இவ்வளவு பெரிய பையன் என்ன சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்கிறான்’ என்று தோன்றியது.
இப்போது அந்த பையன், ‘அப்பா! கீழே வீடுகள் எவ்வளவு சின்னதாக தெரியுது பாருங்கள், வானம் எவ்வளவு நீலமாக இருக்கு பாருங்கள்’ என்று மகிழ்ச்சியாக சத்தம் போட்டுக் கூறினான். இதை அருகில் இருந்துக் கேட்டவர்களுக்கு இப்போது அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. உடனே அந்த பையனின் தந்தையிடம், ‘என்ன உங்க பையன் இப்படி சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கொள்கிறான். அவனை நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினர்.
அதற்கு அந்த பையனின் தந்தையோ, நாங்கள் இப்போது மருத்துவரை பார்த்துவிட்டுத்தான் வருகிறோம். என் மகனுக்கு சிறுவயது முதலே கண் பார்வைக் கிடையாது. இப்போதுதான் அவனுக்கு பார்வைக் கிடைத்தது. இன்று தான் அவன் எல்லாவற்றையும் முதன் முதலாக காண்கிறான். அதனால் தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவன் இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கூறினார்.
இதை கேட்ட மற்றவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக போனது. இதற்குத்தான் எந்த ஒரு விஷயத்தையும் நம்முடைய பார்வையிலிருந்தே பார்க்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். அதை புரிந்துக் கொள்ளாமல் நம்முடைய கண்ணோட்டத்தை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் எடை போடுவது மிகவும் தவறு. இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கை செமையாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.