நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் காப்பாற்ற வேண்டும். ஒருவருக்கு கொடுத்த வாக்கை செய்யாமல் தவறுவது முறையாகாது. ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒருநாள் அந்த ஊரில் பயங்கரமாகப் பனி பெய்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பணக்காரர் தன் வீட்டுக்கு வெளியிலே போர்த்திக் கொள்ளக்கூட போர்வை இல்லாமல் அந்த குளிரில் படுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவரைப் பார்க்கிறார்.
இதைப்பார்த்த அந்த பணக்காரர் அந்த முதியவரிடம் சென்று, ‘இந்த குளிரில் போர்த்திக் கொள்வதற்கு போர்வைக்கூட இல்லாமல் இருக்கிறீர்களே? உங்களுக்கு குளிரவில்லையா? என்று கேட்கிறார். இதைக்கேட்ட முதியவர், ‘என்னிடம் போர்வையெல்லாம் இல்லை. இப்படி இருந்தே எனக்கு பழகிவிட்டது’ என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட பணக்காரர், ‘கொஞ்ச நேரம் காத்திருங்கள். நான் வீட்டிற்கு சென்று ஒரு நல்ல போர்வையாக எடுத்து வந்து உங்களுக்கு தருகிறேன்’ என்று அந்த முதியவருக்கு சத்தியம் செய்கிறார். இதைக்கேட்ட முதியவருக்கு சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. ‘நான் இங்கேயே காத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு போர்வை எடுத்து வாருங்கள்’ என்று சொல்லிக் காத்திருக்கிறார். இப்போது பணக்காரரும் வீட்டிற்கு போர்வை எடுக்க செல்லும்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. அவர் போனிலேயே பிஸியாகி விடுகிறார். இந்த முதியவரை மறந்துவிடுகிறார்.
காலையில்தான் அந்த முதியவரின் நினைவு வருகிறது. உடனே அவசரமாக வீட்டிற்கு வெளியே சென்று பார்க்கிறார். அங்கே அந்த முதியவர் குளிர் தாங்க முடியாமல் இறந்துபோய் கிடக்கிறார். அவர் அருகிலே ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்து பணக்காரர் படிக்க தொடங்குகிறார்.
அதில் முதியவர் கூறியிருந்தது, 'என்னிடம் போர்த்திக் கொள்ள போர்வையில்லை என்றாலும் அந்த குளிரை தாங்கிக்கொள்ளும் மனதைரியம் இருந்தது. ஆனால், எப்போது நீங்கள் எனக்கு சத்தியம் செய்தீர்களோ, அப்போதே அந்த சத்தியத்தை நான் முழுமையாக நம்பிவிட்டேன். அந்த சத்தியமே என்னுடைய முழு தைரியத்தையும் எடுத்துக்கொண்டது' என்று எழுதியிருந்தார்.
எனவே, நீங்கள் செய்யும் சத்தியத்தை உங்களால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சத்தியம் செய்யுங்கள். அப்படி காப்பாற்ற முடியாது என்ற சந்தேகம் இருந்தால் கூட சத்தியம் செய்யாதீர்கள். உங்களுக்கு அது சின்ன விஷயமாக தெரியலாம். ஆனால், மற்றவர்கள் அதையே நம்பிக் கொண்டிருப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.