மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் வாழ்க்கையாகும், இன்பத்தால் வாழும் வாழ்க்கையல்ல. இன்பத்திற்கு ஆசைப்பட்டு குறுகிய காலத்தில் நீங்கள் தேர்வு செய்யும் விஷயங்கள் நீண்ட கால கஷ்டத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால அடிப்படையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள், தொடக்கத்தில் கஷ்டத்தை கொடுத்தாலும் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற வழிவகுக்கும்.
இன்று நீங்கள் உங்கள் வாழ்வில் மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்றால், கடந்த காலத்தில் நீங்கள் செய்த அல்லது செய்யாமல் போன விஷயங்களின் பலனை அனுபவிக்கிறீர்கள் என அர்த்தம். கடந்த காலத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்களோ அதற்கான பலன்தான் தற்போது உங்களுக்குக் கிடைத்துள்ளது. எனவே இன்று நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை உணருங்கள்.
அதிகப்படியான கடன்,
காதல் தோல்வி,
உடல்நிலை சரியில்லை,
பிடித்த விஷயங்களை செய்ய முடியவில்லை,
இவை அனைத்திற்கும் நீங்கள் முடிவு கட்ட வேண்டுமென்றால், நிகழ்காலத்தில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் Discipline என்றால் என்னவெனத் தெரிந்து கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு அழகாக இருக்கும். ஆனால் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் தெரிவதில்லை. அதாவது புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், தினசரி சரியான முடிவுகளை எடுப்பதே Discipline.
சரியான முடிவுகளை நான் எப்படி எடுப்பது?
உங்கள் மூளையின் முன் பக்கத்தில் இருக்கும் Prefrontal Cortex பகுதிதான் உங்களுடைய முடிவெடுக்கும் திறனை நிர்ணயம் செய்கிறது. உங்களுக்கு இந்த பகுதி பலவீனமாக இருக்கும்போது தொடர்ந்து மோசமான முடிவுகளை எடுக்க நேர்கிறது. இதன் காரணமாகவே, நீங்கள் டயட்டில் இருக்கும்போதும் இனிப்பை அதிகமாக சாப்பிடுகிறீர்கள். இரண்டு நாட்களில் தேர்வு இருந்தாலும் சரியாக படிப்பதில்லை. ஜிம் போக வேண்டும் என நினைத்தாலும் போக முடிவதில்லை. தினசரி உங்களுடைய முடிவுகள் மோசமாக இருக்கிறது என்றால் மூளையின் இந்த பகுதி பலகீனமாக இருக்கிறது என அர்த்தம்.
நீங்கள் Discipline-ஆக இல்லாதபோது உங்கள் மூளை சிறு குழந்தையைப் போல சிந்திக்கும். ஒரு வாரத்தில் நம்மால் என்ன 1 லட்சமா சம்பாதிக்க முடியும்? என நினைத்து எப்போதுமே ஏழையாக இருப்பீர்கள். இந்த முட்டைகோஸ் சாப்பிட்டால் என்ன 10 கிலோவா குறைந்து விடப் போகிறது? என நினைத்து குண்டாகவே இருப்பீர்கள். இப்படி ஒரு செயலை செய்வதிலிருந்து தப்பிப்பதற்காகவே உங்கள் முடிவுகள் இருக்கும்.
“சரி, எங்களுக்கு புரிந்துவிட்டது இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்கிறீர்களா?
இன்றைய காலத்தில் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் மோசமாக இருப்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நம்மை திசைத்திருப்பும் பல விஷயங்கள் வந்து, சரியான விஷயங்களை தேர்வு செய்ய முடியாமல் செய்கிறது. இதன் காரணமாகவே உடனடி மகிழ்ச்சியை நோக்கி மனம் செல்கிறது.
Swiggy, Zomato சென்றால் உடனடி உணவு கிடைக்கிறது.
போர் அடித்தால் அதைத் தீர்ப்பதற்கு உடனடியாக Social Media உள்ளது.
ஆபாச உணர்வை உடனடியாக பூர்த்தி செய்ய Porn வெப்சைட்டுகள் உள்ளது.
இப்படி அனைத்துமே வேகமாகக் கிடைக்கும் விஷயங்கள் வந்துவிட்டதால், பொறுமையாக காத்திருந்து சிலவற்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் முற்றிலுமாக போய்விட்டது.
நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் தினசரி சரியான முடிவுகளை எடுத்து Disciplined-ஆக இருக்க வேண்டும் என்றால், முதலில் அனைத்தும் வேகமாக நடக்க வேண்டும் என நினைப்பதை நிறுத்துங்கள். நீங்கள் நிர்ணயம் செய்யும் இலக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக அடைவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கடினமான பாதையில் பயணித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும். கடினமான விஷயங்களை செய்வது மூலமாகவே உங்களின் Prefrontal Cortex பலப்படும்.
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் நான் இறங்க மாட்டேன் என நின்று கொண்டிருந்தால், மறுநாள் குளிர்ந்த நீர் வெந்நீராக மாறப்போவதில்லை. தைரியமாக குளிர்ந்த நீரில் இறங்கினால் மட்டுமே அதற்கு ஏற்றவாறு உங்களுடைய உடல் பக்குவப்படும்.
இப்படிதான் Discipline என்பது வேலை செய்யும். எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடாது. சில மோசமான நிலைகளை நீங்கள் கட்டாயம் கடந்தாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.