motivational articles 
Motivation

விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்..!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

விமர்சனங்கள். இதற்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. நாம் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தாலோ அல்லது பிரபலமாக போகிறவர்களாக இருந்தாலோ நம் வாழ்வில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

ஒருவேளை பெண்ணாக இருந்து வெற்றி பல அடைந்தால் பெண் என்பதால்தான் இந்த வெற்றி என்று விமர்சிக்கப்படுவதுண்டு. வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றால் அதிர்ஷ்ட காற்று இவள் பக்கம் மட்டும் அடிக்கிறதே என்று நம் காதுபட விமர்சிக்கப்படுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட துறையில் சாதித்து தலைமை பொறுப்பு கிடைத்தாலோ இவள் பெண்தானே இவளால் இந்த பணியில் என்ன செய்து விட முடியும்? என்று நிறைய விமர்சனங்கள் நம் காதுபடவே வருவதுண்டு.

நிறைய பேசினால் "வாயாடி" என்றும், பேசாது அளவோடு பழகினால் "திமிர் பிடித்தவள்" என்றும் விமர்சிக்கப் படுவதுண்டு. ஒவ்வொருவருமே நம் வாழ்க்கையில் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் வருகிறோம். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்ள பழகி விட்டால் நம்மால் சுலபமாக எதையும் சாதிக்க முடியும்.

விமர்சனங்களை சமாளிக்க எண்ணுவதை விட, இந்த விமர்சனம் ஏன் என்னை நோக்கி வந்தது, எதனால் வந்தது என்று கலங்கி நிற்பதை விட, தீர்வை தேடுவதை விட எந்த இடத்தில் நாம் விமர்சனத்திற்கு காரணமாகி விட்டோம் என்று சிந்தித்துப் பார்ப்பதே விவேகமான செயலாகும். வருகின்ற விமர்சனங்களுக்கு எந்த விதத்திலும் நாம் பொறுப்பானவர்கள் அல்ல என்று தெரிந்தால் அந்த விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சிலர் அவசியமின்றி மற்றவர்கள் மனதை புண்படுத்துவதற்காகவே தரக்குறைவாக விமர்சனங்களை வைப்பதுண்டு. இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

விமர்சனங்களால் கோபப்படுவதோ, ஆத்திரம் கொள்வதோ தேவையற்றது. இவை நம் கவனத்தை திசை திருப்பக் கூடியது. எனவே விமர்சனங்களை சின்ன புன்னகையோடு கடந்து செல்வது தான் சிறந்தது. நம் வாழ்க்கையில் எதிர்மறையான சிந்தனை கொண்ட நபர்களை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் எதிர்மறை விமர்சனங்கள் நம் சூழலை கெடுப்பதுடன், நம்முடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளையும், செயல்களையும் முடக்கிவிடும்.

சிலர் மற்றவர்களின் ஊக்கத்தை இழக்க செய்வதையே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு நம்மை நெருங்க விடாமல் விலகிச்செல்ல வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய அவநம்பிக்கையான மனநிலை நம்மையும் மாற்றிவிடும். விமர்சனங்கள் நம் வேகமான செயல்களுக்கு சின்ன வேகத்தடையை உண்டு பண்ணக் கூடும். எதிர்மறையான விமர்சனங்கள் செய்யும் நபர்களுடன், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாதம் செய்ய வேண்டாம். நம் நேரத்தையும், சக்தியையும் வீணாக்காமல் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு மன அமைதியைத் தரும் நேர்மறையான செயல்களில் ஒன்றி எதிர்மறை விமர்சனங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற வீண் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருக்கப் பழகவேண்டும்.

தவறுகளைக் களையவும், செய்யும்  செயல் மேம்பட உதவுவதும் தான் விமர்சனம். ஒரு நேர்மையான விமர்சகர் தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார். அவருடைய விமர்சனம் நம் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதாகத்தான் இருக்கும். நம்மை யாராவது விமர்சனம் செய்யும் பொழுது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்தால் அதைக் களைய முற்பட வேண்டும்.

நேர்மறை சிந்தனை, உழைப்பு, உறுதி, நேர்மை இருந்தால் நம்மால் எந்த விமர்சனத்தையும் கடந்து விட முடியும். 

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன! விமர்சனங்களை எதிர்கொள்ள பழகுங்கள்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT