motivation article Image credit - pixabay
Motivation

நிதானம் தவறேல்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வாழ்வில் எதையாவது சாதிக்கவேண்டும் என்று விரும்பும் மனிதர்களுக்கு நிதானம்தான் அற்புதமான ஆயுதம்.  நிதானம் தவறும் போதெல்லாம் ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வார்த்தைகள் கூர்மையான கத்தி போன்றது. அவை நம்மை சிதைக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேசும் முன் நிதானமாக யோசித்து பேசவேண்டும்.

தானத்தில் சிறந்த தானம் நிதானம். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். வார்த்தை என்பது ஏணி போல. நாம் பயன்படுத்துவதை பொறுத்து ஏற்றியும் விடும் இறக்கியும் விடும். சொல்லும் சொல்லிலும், செய்யும் செயலிலும், எடுக்கும் காரியத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக யோசித்து செயல்படுவதே வெற்றிக்கு வழி வகுக்கும். 

எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவது வாழ்வில் நிம்மதியைத் தராது. நின்று நிதானித்து செய்யும் செயல்களில் கோபம் வராது. எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் அதைப்பற்றி தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவு ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நன்றாக முடிவெடுத்த பின் அதிலிருந்து பின்வாங்க கூடாது. நிதானமும் துணிச்சலும் இரு வேறு துருவங்கள். இருப்பினும் நிதானமாய் சிந்தித்து துணிச்சலாய் முடிவெடுக்க வெற்றி நிச்சயம் கிட்டும்.

பதறாத காரியம் சிதறாது என்பார்கள். அதாவது அவசரப்படாமல் நின்று நிதானமாக யோசித்து செய்யும் காரியம் சிதறிப் போகாமல் வெற்றியடையும். செயலில் மட்டுமல்ல பேச்சிலும் நிதானம் தேவை. நிதானமின்றி பேசினால் அந்த வார்த்தைகள் நிதானத்துடன் இருப்பவரின் மனதில் சொல்ல ஒண்ணாத வலியையும் வேதனையும் ஏற்படுத்தும். 

கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது. கோபம் தீர்ந்தபின் நாம் பேசிய வார்த்தைகள் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும். பிறர் மனதில் ஆறாத வலிகளாய் இருந்து கொண்டிருக்கும். எனவே நிதானம் பழகுவது மிகவும் அவசியம். நிதானம் தவறும்போது நாம் இழப்பதற்கு நிறைய விஷயங்கள் வரிசை கட்டி காத்திருக்கும்.

பதட்டத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருந்து தள்ளி நிற்க பழகுவோம். இல்லையெனில் எது நடக்கக்கூடாது என்பதற்காக நாம் பதற்றமும் கோபமும் கொண்டோமோ அது நிதானத்தை இழந்ததால் நடந்தே விடும். நிதானம் தவறினால் நிம்மதியும் தவறிப்போகும். பேசும் வார்த்தையை கவனித்து பேச மதிப்பு கூடும். செய்யும் செயலை நிதானத்துடன் செய்ய வெற்றி கிடைக்கும்.

பருவம் தவறிய மழையும் நிதானம் தவறிய மனிதனும் பயனற்று போவது உறுதி - பகவத் கீதை. பிரச்னை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து சற்று விலகி நின்று நிதானமாக யோசித்து பின் செயல்பட எல்லாம் நன்றாக முடியும். நிதானம் ஒன்றே நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லும். நிதானம் என்னும் அற்புதமான ஆயுதத்தை கையில் எடுத்தால் எதையும்  நம்மால் சாதிக்க முடியும். வேகத்தினாலும், தடுமாற்றத்தினாலும் நம்மால் எதையும் கற்றுக் கொள்ளவோ, சாதிக்கவோ முடியாது.

இறைவன் தனக்கு பிடித்தவர்களுக்கே அதிக பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு சோதனை களை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார் - விவேகானந்தர்.

வாழ்வில் எண்ணியதை எண்ணியபடி பெற நிதானம் தவறக் கூடாது சரிதானே நண்பர்களே!

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT