Motivation image Image credit - pixabay.com
Motivation

மாற்ற முடியாதவற்றிற்காக நேரத்தை வீணாக்காதீர்கள்!

சேலம் சுபா

"Never waste time on the things you can't change or the opinions other people have of you. நீங்கள் மாற்ற முடியாததற்கும், மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிப்ராயத்திற்கும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்" - Rachel Ray.

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி பிரபலம் மற்றும் பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு வெற்றிப் பெண்ணின் மொழி இது. அவர் கூறியபடி இந்த இரண்டே விஷயங்களில் கவனம் வைத்தால் நிச்சயம் வெற்றி தேவதை நம் கரங்களைக் குலுக்குவாள்.

அந்தப் பெண் பெற்றோருக்கு ஒரே மகள். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவள் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கி படிக்க முடியும். ஆனால் எதிர்பாராத ஒரு விபத்து காரணமாக அவள் தந்தை வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். தாயோ படிப்பு அறிவு குறைந்த வெகுளித்தாய். அந்தப் பெண்ணுக்கு பள்ளி இறுதி முடிந்ததும் அவள் பெற்ற மதிப்பெண்களை வைத்து மிகப்பெரிய ஒரு கல்லூரியில் அவளுக்கு ஸ்பான்சர் செய்து கல்வி கற்க அழைத்தது கண்டு அனைவருமே மகிழ்ந்தனர் அவளைத் தவிர.

ஆம். அவள் தன் பெற்றோரை விட்டு வெகுதூரம் செல்வதே விரும்பவில்லை. நல்லதொரு வாய்ப்பை நழுவ விடுகிறாயே என்று அவள் தோழி கேட்டதற்கு அவள் சொன்ன பதில் "மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் நம் கடமை. என் தாய் இனிமேல் படித்து வெளியே போய் சாதிக்க முடியாது. என் தந்தையோ இயங்க முடியாமல் படுத்து இருக்கிறார். இவர்களை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. நான் உள்ளூரிலேயே நல்ல பணி செய்தபடியே படித்து அதில் சாதிப்பதுதான் என்னுடைய விருப்பம் இதுதான் என் முடிவு" என்று உறுதியாக கூறிவிட்டாள்.

இதில் பலரும் அவளுக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் பல விதமான யோசனைகள் கூறினர். தாய் தந்தையரை எங்கேனும் ஒரு இல்லத்தில் சேர்த்து சேர்த்து விடலாம் அல்லது உறவினர் வீட்டில் விடலாம் என்றும் ஆலோசனை சொன்னார்கள். அவள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவளுடைய ஒரே எண்ணம் உள்ளூரில் படித்து உயர வேண்டும், தன் தாய் தந்தையர் பக்கத்திலேயே இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே.

அதே போல் ஊரின் அருகில் இருந்த அரசுக் கல்லூரியில் கணினியை விருப்பப் பாடமாக படித்தும், இடையே பகுதி நேரமாக கணினி மையத்தில் பணி செய்தும் விரைவில் படிப்பு முடிந்து அந்த ஊரில் இருந்த ஒரு கணினி சென்டரின் நிறுவனராக அந்தப் பெண் வெற்றிகரமான தொழில் முனைவராக மாறினாள். இந்தப் பெண்ணை போலத்தான் தன் லட்சியம் எது என்பதை நிர்ணயித்துக் கொண்டு அதற்காக வாழ்ந்து வருவதை தன் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் இனம் கண்டு கொள்ளும்படி தன்னை உயர்த்தி கொள்பவர்கள் உண்மையில் வெற்றிகரமான மனிதர்கள்.

எவர் ஒருவரும் வெற்றி வேண்டுமென்றால் இலட்சியத்தை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதேபோல் நம்முடைய லட்சியம் மிகவும் சுலபமானதாக இருக்கவோ அல்லது கடினமாகவோ இருக்கவோ அனுமதிக்க கூடாது. நம்மால் என்ன முடியும் என்பதை சற்று சிந்தித்து அதன்படி நம்முடைய இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கால்கள் பாதிக்கப்பட்டு  நடப்பதற்கே தடுமாறுபவன் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்வதை போன்ற அடைய முடியாத இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மாற்றவே முடியாத தனது திறமைகளையும் சூழல்களையும் ஏற்று அதற்கு தகுந்தவாறு தன்னுடைய லட்சியத்தை ஒவ்வொருவரும் விதிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் இயற்கையாகவே ஓரிரு விஷயங்களின் மேல் ஆசை அல்லது ஆர்வம் ஏற்படுவது இயற்கை. அதைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது வெற்றி.

கவிஞனாக வர ஆசைப்படும் மாணவனை அவனுடைய பெற்றோர் டாக்டராக வரவேண்டும் என்று வற்புறுத்தினால் அவன் நிச்சயம் ஒரு தரமான மருத்துவராக உருவாகமாட்டான். ஆக ஒருவனின் முயற்சி என்பது அவனுடைய லட்சியத்தை தழுவியதாக இருக்க வேண்டும். அதேபோல் நமது பணியும் நேரமும் அந்த லட்சியத்திற்காக பயன்பட வேண்டும்.

மாற்ற முடியாத சூழல்களில் மாட்டிக் கொண்டு இதை மாற்றவே முடியவில்லை என்று ஆதங்கப்படுவதை விட்டுவிட்டு ஆர்வத்துடன் இருக்கும் சூழலை ஏற்றுக் கொண்டு அதில் நேரம் ஒதுக்கி செயல்பட்டு வெற்றி காண்பதே பெருமை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT