motivational article Image credit - pixabay
Motivation

ஆபத்துக்கு உதவும் மூத்தோர் அறிவுரை!

இந்திராணி தங்கவேல்

ப்பொழுதெல்லாம் சில வீடுகளில் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் உங்களுக்கு ஒன்றும் தெரியாது வாயை மூடிக் கொள்ளுங்கள் என்று இளம்பருவத்தினர் சொல்வதுண்டு. ஆதலால் சில வீடுகளில் சிறியவர்கள் தவறு செய்தால் கூட அதை உரிய முறையில்  எடுத்துக்கூறி திருத்துவதற்கு முதியோர்கள் பயப்படுகிறார்கள். பல வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் சிறார்களும் உண்டு. இதை அவரவர் வீட்டின் வளர்ப்பு முறை என்றுதான் கூறவேண்டும் .

அதேபோல் மூத்தோர்களும் இளம்பருவத்தில் உள்ளவர்களிடமும், சிறுவயதில் உள்ள பேரன், பேத்திகளிடமும் செல்ஃபோன், கணினி போன்றவற்றை பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளும் பொறுமையாக கற்றுக்கொடுக்கிறார்கள். இதுவும் இந்த காலத்தில்  தொடர்ந்து நடந்து  கொண்டுதான் வருகிறது. முதியோர் வார்த்தையும், நெல்லிக்கனியும் முதலில் கசப்பாகத்தான் இருக்கும். அனுபவித்த பின்னர் இனிப்பாவது கண்கூடு. 

ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றில் ஒரு வாத்து கூட்டம் வசித்து வந்தது. ஆலமரத்தின் அடியில் ஒரு கொடி படர்ந்து வளர்ந்தது. அதைக் கண்ட வயது முதிர்ந்த வாத்து ஒன்று 'இந்தக் கொடி ஆலமரத்தை பற்றிப் படர்ந்து வளர்ந்தால் நமக்கு கேடு ஏற்படும். அதனால் இந்தக் கொடியை பிடுங்கி எறியவேண்டும்' என்றது. 

வயதான வாத்து சொன்னதை மற்ற வாத்துகள் கேட்கவில்லை. அகற்றவும் இல்லை. அதனால் அந்த கொடிகள் ஆலமரத்தைப் பற்றி படர்ந்து மேலே சென்றன.

ஒருநாள் வாத்துகள் இரை தேட போயிருந்தன. அப்போது அங்கு ஒரு வேடம் வந்தான். கொடியைப் பற்றி மரத்தின் மேல் ஏறி வாத்துகள் வசிக்கும் இடத்தில் கண்ணி வலை வைத்துவிட்டுப் போய்விட்டான். 

இரைத் தேடிவிட்டு வந்த வாத்துகள் கண்ணி வலையில் மாட்டிக் கொண்டன 'நமக்கு ஆபத்து வந்துவிட்டது எல்லாரும் செத்து மடிவோம்' என்றது வயதான வாத்து. 

'முதியவரே முன்பு நீங்கள் சொன்னதை கேட்காமல் இப்போது சிக்கிக் கொண்டோம். இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்லுங்கள் என்று மற்ற வாத்துகள் கேட்டன. வேடன் திரும்பி வரும்போது நாம் எல்லோரும் இறந்துவிட்டது போல நடிக்க வேண்டும். எல்லோரையும் மரத்திலிருந்து எடுத்து கீழே போடுவான். பிறகு அவன் மரத்திலிருந்து இறங்கி வருவதற்குள் பறந்து ஓடிவிட வேண்டும் என்று வயதான வாத்து கூறியது. 

வேடன் வந்தான் அப்போது அவைகள் இறந்தது போல் நடித்தன. அந்த வேடன் நம்பி விட்டான். அவற்றை ஒவ்வொன்றாக கீழே போட்டான். அவன் கீழே இறங்கி வருவதற்கு முன் வயதான வாழ்த்து சொன்னபடி ஒற்றுமையாக பறந்து ஓடிவிட்டன.

இதற்குத்தான் முன்னோர் அறிவுரையைக் கேட்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டன வாத்துகள். 

தம்மிற் பெரியோர் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாம் தலை. என்கிறார் திருவள்ளுவர். 

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்கிறார் அவ்வையார். 

அதிகமான அன்பை விட சரியான புரிதல்தான் எந்த உறவையும்  நீண்ட காலம் வாழ வைக்கும் ஆற்றல் படைத்தது என்பதால், பெரியோர்களின் வார்த்தைகளை புரிந்து கொள்வோம். அவர்களுக்கு உரிய மரியாதையை தவறாமல் என்றென்றும் செலுத்துவோம். அது நீண்ட நெடிய உறவுக்கு பாலம் அமைக்கும் என்பது உறுதி.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT