வானத்தில் இருந்து பெய்யும் மழைத்துளிகள் ஒன்றாக சேர்ந்து காடுகள், மலைகளை எல்லாம் கடந்து நீண்ட தூர பயணம் செய்து ஓரிடத்தில் அருவியாக கொட்டுகிறது. அவ்வாறு கீழே விழும் அருவி ஓரிடத்தில் நிலைத்து நிற்பதால் யாருக்கும் பயன் அளிக்கப்போவதில்லை. அது சிறு ஓடையாகவோ, ஆறாகவோ அல்லது கடலைத் தேடியோ தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த பயணம் தொடர்ந்து கவனிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டுக் கொண்டும் இருக்கும். இந்த அருவியைப்போல்தான் மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையும் இருக்கிறது.
வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, தட்டுத் தடுமாறி உயரத்தை அடையும் அருவியைப்போல ஏதாவது ஒரு உயரத்திற்கு சென்று விடலாம். ஆனால் அவ்வாறு சென்ற பிறகுதான் அங்கு இன்னொரு பயணம் ஆரம்பமாக காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. உயரத்தில் உள்ள அந்தப் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு தொடர் உழைப்பு தேவை, தொடர் முயற்சி தேவை, அந்தப் பயணம் சலிப்படையாமல் முழுமையாக நகர்த்திச் செல்வதற்கு தொடர் ஈடுபாடு தேவை. எனவே கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு வெற்றியை அடைவதற்கு உழைப்பதை காட்டிலும் அதிகமாக அந்த வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு உழைக்க வேண்டியுள்ளது. ஒருவேளை அந்த இடத்தில் நம்முடைய உழைப்பை சரியாக போடாவிட்டால் நாம் தட்டுத் தடுமாறி அடைந்த வெற்றிப் பயணம் எல்லைகள் இல்லாமல் சிதறி ஓரிடத்தில் இல்லாமலேயே போய் விடுகிறது.
எனவே மனிதர்களாகிய நமக்கு வாழ்க்கையில் எப்போதும் உழைக்காத காலம் என்றோ, ஓய்வெடுக்கும் காலம் என்றோ, ஒன்று இருக்கப் போவதே இல்லை. உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல, சிந்தனையோடு சேர்ந்ததும் உழைப்புதான். தொடர்ச்சியான சிந்தனைதான் வளமான வாழ்வை கட்டமைக்க உதவும். எனவே இந்த வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தொடர் உழைப்பும் தொடர் முயற்சிகளும் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளை தொடர்ந்து கவனிக்கும் வரலாற்று நுண்ணறிவும் தேவை. எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் வந்தபோதும் கூட, இருக்கும் இடத்திலேயே பொழுதை போக்கிக்கொள்ள ஆயிரம் வசதிகள் இருந்தும் கூட ஏதோ ஒரு இடத்தில் நாம் அனைவரும் வாழ்க்கையின் மீது ஒருவித சலிப்பையும், வெறுமையும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் இந்த வாழ்க்கை எனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனை காண்பது பெரும்பாலும் அரிதாகத்தான் உள்ளது. அதற்கு நாம் வாழ்ந்து வரும் சமுதாயமும் சமுதாயத்தில் நிலவக்கூடிய பிரச்னைகளும் ஒரு முக்கிய காரணம். எனவே ஒரு தனி மனிதனின் வாழ்வு மேம்பட வேண்டும் என்றால் இந்த சமூகம் நல்ல ஒரு மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். ஒரு சாமானியனுக்கு சமையல் அறையில் தொடங்கும் பிரச்னைகள் அவன் மரணம் வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது. எனவே நாம் அனைவரும் சந்திக்கும் இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட்டு புதியதொரு வாழ்க்கையை வாழ தொடங்குவதற்கு நம் சமூகத்தில் உள்ள பிரச்னைகள் யாவும் களையெடுக்கப்பட வேண்டும்.
நாம் அனைவரும் நவராத்திரியை மிக சிறப்பாக கொண்டாடிக் கொண்டு வருகிறோம். அன்றைய காலகட்டங்களில் நிலவிய அத்தனை பிரச்னைகளுக்கும் மகிஷாசுரன் என்று அரக்கனின் வடிவம் கொடுத்து அவை அத்தனையையும் அழித்து மக்களை காப்பாற்றி மகிஷாசுரமர்த்தினியாக புது அவதாரம் எடுத்தாள் அம்பிகை. இன்றும் கூட நம் கண் முன் ஆயிரக்கணக்கான பிரச்னைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் நாம் அழிக்க வேண்டிய மகிஷாசுரன் யார்? என்பதையும் அந்த மகிஷாசுரனை அழிக்கக்கூடிய மகிஷாசுரமர்த்தினி யார்? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் தீமைகள் ஒழிந்து நன்மைகள் ஒளிரும் இந்த நாளில் நாமும் நம் சமூகத்தில் நிலவக்கூடிய தீமைகளை அழிக்கும் வழிமுறைகளைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.