ஒரு தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டால் அந்த தோல்வியும் வெற்றிதான். வெற்றியின் அளவு என்பது நாம் எவ்வளவு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிறோம் என்பதில்தான் உள்ளது. வெற்றி பெறுவதை விட அதை தக்க வைத்துக் கொள்வதில்தான் நம் திறமையும் உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.
தோல்விகளில் இருந்துதான் ஒரு வெற்றியாளன் பிறக்கிறான். அதற்கு அவன் நிறைய மெனக்கிட்டு பாடுபட்டால்தான் அந்த நிலையை அடையமுடியும். ஒரு உண்மையான வெற்றி என்பது அடுத்தவரை காயப்படுத்தாமல் அடைவதே ஆகும். மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி அடையும் வெற்றி என்றும் நிலைக்காது.
மற்றவர்களால் தோற்கடிக்கப்பட்டால் அது தோல்வி ஆகாது. நம்மால் முடியாது என்று நாம் துவண்டு விழும்போதுதான் நாம் தோற்கடிக்கப்பட்டவர்களாவோம். அதுதான் உண்மையான தோல்வியும் கூட. எனவே துவண்டு விடாமல் துணிச்சலுடன் போராடி வெற்றிக் கனியை பறிக்க முயலவேண்டும்.
வாழ்வில் தோற்றுப்போவது என்பது நாம் தகுதியற்றவர்கள் என்பதால் அல்ல. தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பதுதான் தோற்றுப் போவதற்கான காரணம். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தை வெல்வதுதான் வெற்றிக்கான முதல் படி. தோல்விகள் மூலம் கற்றுக்கொண்ட உழைப்பே வெற்றிக்கு அடித்தளமாகும்.
வெற்றியின் வாசலை அடைய ஆயிரம் தோல்விகளின் வாசல்களைக் கடந்துதான் வரவேண்டி இருக்கும். அதற்காக ஒரு செயலில் இறங்கும் முன்பே தோல்வியைப் பற்றிய எண்ணத்தை நம் மனதில் ஓட விடக்கூடாது.
எல்லோராலும் வெற்றியை உடனே அடைந்து விட முடியாது. பல தோல்விகளை படிக்கட்டுகளாக ஆக்கிக் கொண்டுதான் பல மனிதர்கள் பெரிய பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள். தோல்வி தரும் அனுபவ பாடம் வாழ்வில் மேலும் உயர வழி வகுக்கும்.
நாம் ஒரு செயலில் ஈடுபடும்போது வெற்றி பெறுவதற்கான எண்ணத்தை மட்டுமே உருவாக்கிக் கொண்டு செயலாற்ற தொடங்கினால் நம்மால் பல வெற்றிகளைக் காணமுடியும்.
தோல்விகளைப் பற்றிய எண்ணங்களும், பயமும்தான் வெற்றிக்கு பெரிய முட்டுக்கட்டை. பயம் இல்லை என்றால் எடுத்த உடனேயே எவ்வளவு பெரிய சவால்களையும் நம்மால் சமாளித்து ஜெயித்துவிட முடியும்.
அப்படியே தோல்விகள் ஏற்பட்டாலும் அவை நம்மை பாதிக்காமல் இருக்க வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரி பார்க்கின்ற மனநிலை வேண்டும். வெற்றி வந்தால் கொண்டாட்டமும், தோல்வி வந்தால் வருத்தமும் இன்றி அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரே சிந்தனையில் மூழ்கி முயற்சி செய்ய வேண்டும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் மயிரிழை அளவுதான். வேண்டுமென்றால் ஒலிம்பிக்கில் பதக்கம் தவற விட்டவர்களை கேட்டுப் பாருங்கள்! வெற்றி என்பது பல தொடர் தோல்விகளின் முடிவுரையாகவும், தோல்வி என்பது பல வெற்றிகளை சுவைப்பதற்கான தொடக்கவுரையாகவும் கொள்ளலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டமிடல் ஆகியவை அவசியம். வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!