சின்னக்குழந்தை நடைபழகும் நேரத்தில் தட்டுத்தடுமாறி கீழே விழுவதைப் பார்த்து எவரும் எள்ளி நகையாடுவதில்லை. ஏனென்றால், அந்தக் குழந்தை உடனே எழுந்துவிடும். என்பதும் விரைவில் நடைபழகிவிடும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே!
ஆனால் வயதான பின் ஏதாவதொரு பரிட்சையில் தோற்றுவிட்டால், வியாபாரத்தில் நஷ்டமடைந்தால், உடையில் சேறு படிந்தால், ரோட்டில் வைத்து கடன்காரன் மானத்தை வாங்கிவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்து செயல்படுவதைவிட, பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்றுதான் அதிகமாக கவலைப்படுகிறோம்.
ஆனால், உண்மையில் இங்கே யாருக்கும் பிறரைக் கவனிக்கவோ, கவலைப்படவோ நேரம் கிடையாது. அதனால்எது தவறாக நேர்ந்தது என்று நினைக்கிறோமோ, அதிலிருந்து மீண்டு வரவேண்டியது மட்டும்தான் முக்கியம்.
தோல்வி என்பது கீழே விழுவது போன்ற ஒரு சாதாரண நிகழ்வு என்பதை புத்திசாலி அறிந்தே இருப்பான். வெற்றிக்கனவுக்கு முற்றுப்புள்ளியல்ல தோல்வி, இதுவும் பயணத்தில் ஒரு பகுதி என்பதில் தெளிவாக இருப்பான். இதுதான் நேர்மறையான சிந்தனை.
தோல்விகளைக் கண்டு அயராத மனிதன் இருந்தார். எது நடந்தாலும் அதுகுறித்து கவலையின்றி பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார், அவர் பெயர் ஆபிரகாம் லிங்கன். அவரை 'தோல்விகளின் குழந்தை' என்று சொல்வார்கள்.
ஏனென்றால், 22-வது வயதில் வியாபாரத்தில் தோல்வியை சந்தித்தார்.
23-வது வயதில் சட்டம் படிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்.
24-வது வயதில் மீண்டும் வியாபாரத்தில் தோல்வியடைந்தார்.
26-வது வயதில் காதலி மரணமடைந்தார்.
27-வது வயதில் நரம்புக்கோளாறுக்கு ஆட்பட்டார்.
29-வது வயதில் முதல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
31-வது வயதில் மீண்டும் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
34-வது வயதில் மீண்டும் தேர்தலில் நின்று தோற்றார்.
39-வது வயதில் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
46-வது வயதில் செனட் தேர்தலில் தோல்வி.
47-வது வயதில் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
49-வது வயதில் செனட் தேர்தலில் தோல்வி.
51-வது வயதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி.
ஒவ்வொரு முறை தோல்வியை சந்தித்தபோதும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாமல், அடுத்த இலக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார் லிங்கன். அவர் அமெரிக்க அதிபரக பதவி ஏற்ற பின்னரும், அவருக்கு ஏராளமான விமர்சனங்கள் வந்தது. அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அதிபர் பதவி என்பது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாவதுதான். யாராவது ஒருவர் அதிபராக இருந்துதானே ஆகவேண்டும். அது நானாகவே இருக்கட்டும்" என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.
அடிக்கடி தோல்விகளைச் சந்திக்கும் வேளையில் பிறரது ஏளனத்துக்கும் கேலிக்கும் ஆளாக நேரிடலாம். ஆனால் அந்த நேரம் மனஉறுதியுடன் என்னால் கண்டிப்பாக வெல்ல முடியும் என்று மீண்டும் எழுந்து வருபவனால்தான் வெற்றிக்கனியை பறித்திட முடியும்.