motivation image Image credit - pixabay.com
Motivation

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

சேலம் சுபா

"உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனெனில் கைகள் இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு"- அப்துல் கலாம்.

ஒரு இளைஞன் தனது முன்னேற்றம் பற்றி அறிய  கிளி ஜோசியம் பார்த்தான். ஜோதிடம் சொன்னவர் ஆச்சரியப்பட்டார். ஏனெனில் அந்த இளைஞன் பன்முகத் திறமைகளைக் கொண்டவனாக இருந்தான்.

"ஐயா இதுவரை எனக்கு ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை. எப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கும்? என்று கேட்டான்.

"தம்பி நீங்க படிச்சு பட்டம் வாங்கினதோட ஓவியம் நடனம் சமையல் இப்படி எல்லாம் கற்று உள்ளீர்கள் என சீட்டு சொல்லுது. உண்மையா?"எனக் கேட்டார்.

 "ஆம் ஐயா. எல்லாம் கத்துக்கிட்டேன் என்ன பிரயோசனம்?

"ஆமாம் உங்கள் திறமைகளை நீங்கள் யாரிடமாவது சொல்லி வெளிக்காட்டியதுண்டா?"

"அதையெல்லாம் சொன்னா கர்வம்னு நினைச்சு வேலை கிடைக்காது. அதனால அதிகமா யாரிடமும் சொல்லிக்கமாட்டேன்"

"அப்புறம் எப்படி வேலை கிடைக்கும்... இப்பல்லாம் படிப்போட இந்த மாதிரி கலைகளும் இருந்தா மதிப்புதான்"

அந்த இளைஞன் தன் தவறைத் தெரிந்து தன் அத்தனை திறமைகளையும் காட்டத் தயாரானான். வெற்றி இனி அவன் வசம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்த இளைஞனைப் போலத்தான் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்காட்டத் தயங்கி பின் தங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.

நம் திறமையை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டத்  தவறினால் நமக்கு வரவேண்டிய செல்வம், உயர் பதவி, செல்வாக்கு, புகழ் போன்றவைகளையும் தவறவிடுவோம். உலகம் நம்மைத் தேடிவந்து நம் திறமையைக் கண்டறிந்து உயர்ந்த பதவி தரப்போகிறது என்று காத்திருந்தால் ஏமாறத்தான் வேண்டி இருக்கும்.

நமக்கான  பணி வாய்ப்பு உருவாக்கும் அதிகாரம் கொண்டவர்களிடம் உங்களால் பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட முடியும் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

அதே போல் பணியில் சேர்ந்த பின் பெரிய அதிகாரிகளின் பார்வையிலிருந்து தங்களை மறைத்துக் கொள்பவர் களுக்கு பணி உயர்வு நிச்சயம் கிடைக்காது. அலுவலகம் இன்னும் சிறந்த முறையில் செயலாற்றுவதற்கு சிறந்த யோசனைகளை உயர் அதிகாரியிடம் எடுத்துச் சொல்லத் தயங்காதீர்கள்.

செயல் திறமையையும், அறிவையும் வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்ட சந்தர்ப்பங்கள் வாய்த்தால் நிச்சயம் தவறவிடாமல் அதை உங்கள் வெற்றிக்கான முன்னோட்டமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். 

உங்களுடைய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவரும்படி புதுமைகளை செய்யுங்கள். திறமைக்கேற்ற பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற முயற்சி செய்யுங்கள். இதில் ஒன்றும் வெட்கப்படத் தேவையில்லை.

நம்முடைய திறமைக்கு தரும் பரிசுகளையும் பாராட்டுகளையும் நாம் பெறுவதில் எவ்வித பெரிய காரியங்களை செய்து முடிப்பதாக மற்றவர்கள் எதிரில் சவால் விட்டு அவைகளை செய்து காட்டுங்கள். நாம் விடும் சவால்களே நம்மை வாழ்க்கை கடலில் முன்னோக்கி செலுத்தும் துடுப்புகளாக மாறும்.

அலுவலகத்தில் பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போது கை கட்டி வேடிக்கை பார்ப்பது மிகப்பெரிய தவறு. நீங்களும் அவர்களில் ஒருவராக தீவிரமாக பங்கு எடுத்துக் கொண்டு உங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்தைக் கவர முயற்சி செய்வதே சரி.

திறமைக்கேற்ற ஊதியமோ, தகுதியான பணியை, தேவையான விடுமுறை அல்லது மாறுதலோ எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். நீங்கள் கேட்பதற்கு வெட்கப்பட்டால் உங்கள் உயர் அதிகாரிகள் உங்களை புறக்கணித்து விடுவார்கள். நீங்கள் உங்களை குறைவாக மதிப்பிட்டுக் கொண்டால் அனைவரும் உங்களை குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். இதைப் புரிந்து திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT