Announcement 
Motivation

அறிவிப்புகளின் அவசியத்தை உணருங்கள்!

ம.வசந்தி

றிவிப்புகளை அலங்காரப் பொருட்களாகக் கருதுவதை, அவசியம் தவிர்த்துவிடுங்கள். அறிவிப்புகளை அலட்சியப்படுத்துவதால் பலவித அசௌகரியங்கள், துன்பங்கள் ஏற்படுவது நிச்சயம். இந்த அலட்சியத்தால் தொலைபேசி, மின்கட்டணம், வருமான வரி, சொத்து வரி போன்ற பலவற்றையும் அபராதங்களோடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது நமது அலட்சியத்தால் நாமே உருவாக்கிக் கொண்டது. இதற்காக மற்றவர்களைக் குறை சொல்லக்கூடாது.

அறிவிப்புகளைக் கேட்பது, படிப்பது, புரிந்து கொள்வது அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி செயல்படுவது ஆகியவையும் கற்றலின் ஓர் இன்றியமையாத அங்கம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

கல்விச்சாலைகள், நூலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், அரசாங்கம் மற்றும் தனியார் அலுவலகங்கள், போக்குவரத்து நிலையங்கள், உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகள், பல்பொருள் அங்காடிகள், பூங்காக்கள் போன்ற பல பொது இடங்களில் அறிவிப்புகள், ஒலிபெருக்கி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவையாவும் பொதுமக்களின் பயனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தான். பொதுமக்களும், குறிப்பாக, படிக்கும் இளைஞர்களும் இவற்றைப் புறக்கணிப்பது சமுதாய வளச்சிக்குத் தடையாக மாறிவிடும் என்பது உறுதி.வகுப்பறைக்குச் செல்லும் முன்போ அல்ல பிறகோ பள்ளியில் உள்ள அறிவிப்புப் பலகைகளையெல்லாம் ஒருமுறை பார்த்து, அவற்றில் உள்ள செய்திகளைப் புரிந்துகொண்டு  பழக்கப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் நிச்சயம் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

வேலைக்காக ஒரு நேர்காணலில், "நீங்கள் அமர்ந்திருந்த  வரவேற்பறையில் எத்தனை அறிவிப்புப் பலகைகள் இருந்தன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கான சரியான பதிலை அளித்த ஒரே ஒரு நபருக்கு உடனடியாக வேலைக்கான ஆர்டர் வழங்கப்பட்டது. காரணம், அந்த வேலை மக்கள் தொடர்பு அதிகாரிக்கானது. மக்கள் தொடர்பு என்பதே பலவகையான அறிவிப்புகளை உள்ளடக்கியதுதானே!

நமது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பலவிதமான போட்டிகளில் பங்கு பெற்று, தகுதி அடிப்படையில் முன்னேற்றம் காண்பதற்கும் செய்தித்தாள்களில் பல அறிவிப்புகள் வெளியாகின்றன. முன்னேற்றத்திற்கான பாதைகளும் படிக்கட்டுகளும் எங்குள்ளன என்பதற்கான வழிகாட்டிகள்தான் இத்தகைய அறிவிப்புகள்.

2011-இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் 2015-ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஓரிரு சம்பவங்களைத் தவிர பேரிழப்பு ஏதுமில்லை. நிலநடுக்கத்தின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவிப்புகளை ஜப்பானிய மக்கள் புறக்கணிக்காமல் கவனமாகக் கடைப்பிடித்ததுதான் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒருநாளைக்கு எத்தனை அறிவிப்புப் பலகைகளைப் படிக்காமலும், படித்தாலும் அதன்படி நடக்காமலும் நம்மில் பலர் செல்கின்றனர். நகரத்தெருக்களில் ஒருவழிப்பாதை, வாகனங்களை இங்கே நிறுத்தாதீர்கள். இங்கே துப்பாதீர்கள், புகை பிடிக்காதீர்கள், குப்பைகளைத் தொட்டியில் போடுங்கள் என்பது போன்ற பல அறிவிப்புப் பலகைகளைப் படித்து எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்.

வாழ்க்கைப் பயணத்தின் நீண்ட பாதையில் பலவிதமான அறிவிப்புகளைச் சந்திக்க நேரிடும். அவற்றால் பயனுண்டா இல்லையா என்பதைக்கூடப் படித்துப் பார்த்தால்தானே புரிந்து கொள்ள முடியும்.  எனவே அறிவிப்புகளின் அவசியத்தை உணர்ந்து அவற்றை அலட்சியம் செய்யாத மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT