ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர் நாடு கடத்தப்பட்டார்கள். நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறனும் வளர்ந்தது. அறியாமையை அழித்தது. தெரியாமை தெறித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கபூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி விடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வதுதான் கடினம். ஒரு செயலைத் தொடங்கும்போது 'இதை முடிக்க முடியும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் வெற்றிபெற முடியும், சிந்தனை இருந்தால்தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும்.
செயல்படுவதற்கான மனஉறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும். முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாகப் பிறப்பது ஒரு நிகழ்ச்சி.
பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொண்டவரே பெருமையும் வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை .
கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுவது முன்னேறுவதற்கு முதல் படியாக அமையும், நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது.
அந்த தகுதி என்ன என்பதனைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய அமைப்பிலே வாழ்ந்து மறைந்தவர்களும், வாழ்பவர்களும் ஒவ்வொரு விதமான தகுதிகளைப் பெற்றிருந்த படியினால்தான், இந்த உலகம் ஓர் ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் கவிஞருக்குச் சரியாசனம் கொடுக்கத் தவறிவிட்டார். அதைப் பார்த்து பாரதியார் கூனிக் குறுகிவிடவில்லை. மாறாக எட்டயபுர அரசரைப் பார்த்து "நீர் ஊருக்கு வேந்தர், நானோ பாட்டுக்கு வேந்தர். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது என்று கூறிவிட்டு, அவருக்கு இணையாக ஓர் ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.
பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர, தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை.
அரசருக்கு இணையாக உட்கார்ந்த துணிவைப் போற்றாமல் இருக்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார். தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால்தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுப் பவனி வருகின்றன. ஆதலால் முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும் அப்பொழுதுதான் துணிவும் தொடக்கமும் பிறக்கும்.