Reading books... 
Motivation

நல்ல நூலறிவு முன்னேற்றத்திற்கு அவசியம்!

ம.வசந்தி

ன்றைய தினத்தை விட நாளைய தினம் வெற்றி பெற்று மாமனிதனாக வாழ, படிப்பு மறுமலர்ச்சிக்கு சக்தி வாய்ந்த சாதனமாக இருக்கிறது. கடமைகளைச் சுட்டிக்காட்டி பொறுப்புணர்ச்சியும் விசுவாசமும் கொண்ட மனிதனாக மாற்றுகிறது.

ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேறுவதற்கு அதனுடைய பாதை தெரிந்திருக்க வேண்டியது போல எதைப் படிக்க வேண்டும் என்பதனையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்

தெளிவடைந்த மனம் உறுதியாக இயங்குவதற்கு  ஏதுவாக இருக்கிறது. எப்படியோ வாழ்ந்து விடுவோம்  என்னும் மனப்பான்மையை விரட்டி இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவது படிப்பு.

வரலாறு நமக்குத் தன்மான உணர்ச்சியைக் கொடுத்து ஊக்குவிப்பதோடல்லாமல் சென்ற காலத் தலைவர்கள்  சந்தித்த பல்வேறு போராட்டங்கள் அவர்கள் எடுத்த முடிவு இவற்றைக் கூறி நமது பகுத்தறியும் சக்தியை அதிகப்படுத்துகிறது.

முதல் உலக  மகா யுத்தத்திற்குப் பிறகு ஜெர்மானியர்கள் விரக்தி அடைந்திருந்தனர்.அப்போது ஹிட்லர் மனதில் ஏற்பட்ட புரட்சிக்குத் தகுந்தாற்போல் மாக்கியவல்லி எழுதிய 'இளவரசன்' என்னும் நூல் அவருக்குக் கிடைக்கவே, படித்தார்.

நாம் மேற்கொள்ளும் எக்காரியத்துக்கும் நேர்மையான வழியையே பின்பற்ற வேண்டும் என பல நூல்கள் அறிவுறுத்தும்போது, இந்நூல் குறிக்கோளில் வெற்றிதான் முக்கியமே தவிர அதற்காக மேற்கொள்ளும் வழி முக்கியமல்ல என்றும், நாட்டின் நன்மைக்காக எந்த முறையைக் கையாண்டாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறது.

இந்தக் கருத்துக்கள்தான் ஹிட்லர் மேற்கொண்ட  ஒவ்வொரு செயலின் பின்னணியாகவும் திகழ்ந்தது.  அதன் பயன் ஹிட்லர் வீழ்ச்சியடைய வேண்டியதாயிற்று.  இதற்கு மாறுபட்ட அமைப்பையும் நல்ல நூலைப் படிப்பதன் மூலம் ஏற்படுத்த முடியும்.

ஆப்ரகாம் லிங்கன் புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் பெற்றது ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றிய வரலாற்று நூலைப் படித்ததனால்தான்.

வாஷிங்டனின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை,  தன்னலமற்ற தியாகம், அதற்காக அவர் எடுத்துக்   கொண்ட மாபெரும் முயற்சி ஆகிய ஒவ்வொன்றும் ஏற்கனவே லிங்கன் மனதில் ஏற்பட்டிருந்து உணர்வைச் செயலாற்றத் தூண்டியிருக்கிறது.

அதன் பயன் அவரும் வாஷிங்டனைப் போலவே ஜனாதிபதியானார். பொதுவாக நம்மைச் செயல்படத் தூண்டும் பல புத்தகங்களைப் படிப்பது நன்மை பயக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

ஆனால் அந்தப் புத்தகங்களால் ஏற்படும் பலன்களும் ஓரளவு நம்முடைய மனதைப்  பிரதிபலிப்பதாகவே இருக்கும். இதற்கு இந்த இரண்டு தலைவர்களே சான்றுகளாவர்.

நாம் படிக்கவேண்டும். படித்தால்தான் வாழ்வதின் மகத்துவம் தெரியும், வாழ்வின் மகத்துவம் அறிவை வளரச் செய்வதில்தான் இருக்கிறது.

அறிவு வளர வளர நம்முடைய முன்னேற்றமும் விரைவாக, சீர்மையாக நம்மைத் தேடி ஓடி வரும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT