நம்மால் இயன்ற அளவு மனதையும், உடலையும் செயலில் ஈடுபடுத்தி, மனதின் சோர்வையும், உடலின் வலிகளையும் தாங்கி இலட்சியத்தை நோக்கி உழைப்பதுதான் கடின உழைப்பு. இலக்கு கடினமாக இருப்பதாலும், சாதாரண முயற்சிகளால் அந்த இலக்கை அடைவது கடினமாக இருப்பதாலும் வெற்றிபெற அதிக உழைப்பு தேவைப் படுகிறது. கடின உழைப்பு குறித்த வரையறை ஒருவருக்கொருவர் வேறுபடும்.
சில செயல்கள் சிலருக்கு இலகுவாக இருக்கும். அதே செயல்களை செய்து முடிக்க மற்றவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஒருவரின் நோக்கத்தைப் பொறுத்தும், அவரின் திறமைகளைப் பொறுத்தும், அவர் செயலாற்றும் சூழலைப் பொறுத்தும், அவரின் முந்தைய அனுபவத்தைப் பொறுத்தும் உழைப்பின் தரம் வேறுபடும்.
கடினமாக உழைக்கிறோம் எனக் கூறும்போது நாம் செய்கின்ற வேலை கடினமானதென்றோ அல்லது மகிழ்ச்சியற்றதென்றோ என்பது பொருள் அல்ல. கடினமாக உழைப்பது சந்தோஷத்தையும் மனநிறைவையும் தருகிறது. அந்த சாதனை நிகழப்போகிறது என்ற எண்ணமே கடினஉழைப்பின் கடினத்தைக் குறைத்துவிடும். தோற்றுவிடுவோமோ என்ற கவலை கடின உழைப்புக்கு எதிரி. தோல்வி குறித்த கவலையைமறந்து உத்சாகத்துடன் இலட்சியத்தை நோக்கிய உழைப்பே கடின உழைப்பு. கவலை தரும் சோர்வு, பயம், விரக்தி முதலியவை உழைப்பைத் தடை செய்யும். செயலின்போது எதை இழந்தாலும் உத்சாகத்தை இழக்கக்கூடாது நாம் யாருக்கும் சளைக்காதவர் அல்ல என்ற எண்ண ஓட்டத்துக்கு உழைப்பில் முன் செல்லும்போது, கடின உழைப்பும் கூடவே வருகிறது. கவலை மறைகிறது.
பெரும்பாலோர் தாங்கள் செய்யும் வேலைகளை எல்லாம் கடின உழைப்பாகவே நம்புகின்றனர். தினம் தினம் நாம் செய்கிற வேலைகளை கடும் உழைப்பாக கருத முடியாது. சாதாரண செயல்களைத்காட்டி இலட்சியங்களை அடைய திட்டமிட்டு விடாப்பிடியுடன் சுகபோகங்களை மறந்து கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு, வேலை செய்வதே கடின உழைப்பாகும்.
உழைப்பின் தீவிரம் அதிகரிப்பதுடன் இலக்கை அடைவதற்காக தியாகங்கள் செய்யவும் தயாராகிறோம். உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கான பயணத்தின் வழி கரடுமுரடானது. எதிர்ப்புகள் மிகுந்தது. தோல்விகளை கண்கொண்டு கட்டப்பட்ட படிகளாலே அப்பாதை கடினமானதாக இருக்கும். இலட்சியங்களை சென்றடைய முயற்சி செய்ய வேண்டியது கட்டாயம். திறமைகளையும் வளர்த்தாக வேண்டும். தகுந்த திட்டங்களையும் வகுத்தாக வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.