Motivation Image
Motivation Image 
Motivation

வாழ்க்கையில் எப்பொழுதாவது இதை யோசித்துப் பார்த்ததுண்டா?

நான்சி மலர்

ம்முடைய அவசரமான வாழ்கை முறையில், ‘நிறைய அழகான தருணங்களை இழந்துவிட்டோம்’ என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. இரவிலே குடும்பமாக மாடிக்கு சென்று நிலாச்சோறு சாப்பிட்ட கடைசி தலைமுறையாக இருக்கிறோம்.

இரவிலே அமைதியாக வானத்தை பார்த்து நட்சத்திரத்தை எண்ணுவதற்கு இப்போதெல்லாம் நேரமிருக்கிறதா என்ன?

இருப்பினும் வானத்திலே அழகாக தெரியும் பவுர்ணமி நிலவை அவ்வப்போது பார்ப்பதுண்டு. அதை பார்த்ததும் மனதில் தோன்றும் விஷயங்களை பற்றி இங்கே எழுதுகிறேன்.

வானத்தில் அழகாக தெரியும் முழு நிலவு, நமக்கு அது நிலவாக இருக்கலாம். ஆனால் அதற்கு எத்தனை பெயர்கள் உண்டு தெரியுமா?

ஒரு குழந்தையிடம் அது என்னவென்று கேட்டால், வெண்ணை உருண்டை என்று பதில் சொல்லும்.

ஒரு அம்மாவுக்கோ அது தன் குழந்தையை சோறு சாப்பிட வைக்க பயன்படும் ஒரு விளையாட்டு பொருள்.

ஆராய்ச்சியாளர்களுக்கோ நிலவு ஒரு இயற்கையான செயற்கைக்கோள் ஆகும்.

கவிஞனுக்கோ பெண்களின் முகத்துடன் ஒப்பிட்டு கவிதை எழுதுவதற்கான உவமை.

சிறுவர்களுக்கோ அது பாட்டி வடை சுடும் இடம்.

திகில் படம் விரும்பிகளுக்கு அது ஆவிகள் வருவதற்கான சரியான நேரத்தை காட்டும் கடிகாரம்.

எனக்கோ நிலவு ஒரு வழித்துணை. நான் எங்கே சென்றாலும் இரவில் என்னுடனே பின்தொடர்ந்து வரும்.

கருமையான வானத்தில் வெண்மையாக நிலவு தோன்றினாலும், என் கண்களுக்கு  வண்ணமயமாகவே தெரிகிறது.

உங்களுக்கு இந்த நிலவை பார்க்கும் போது என்ன தோன்றும்? எப்போதாவது நிலவை பார்த்து ரசித்திருக்கிறீர்களா?

பெரும்பாலும் உங்களுடைய பதில் ‘இல்லை’ என்றே வரும். ஏனெனில் பரபரப்பான வாழ்க்கை, நேரமின்மை, அதிக வேலைபளு, மன அழுத்தம் இருக்கிறது. இதற்கு நடுவிலே இதை பார்த்து ரசிக்க எங்கே நேரமிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது எது தெரியுமா?

சின்ன சின்ன தருணங்களையும் முழுமையாக வாழ்வதேயாகும். ஒரு நாள் நீங்கள் நின்று திரும்பி பார்க்கும் போது வாழ்க்கையில் அசைப் போடுவதற்காகவாவது சின்ன சின்ன அழகிய தருணங்களை வாழ்க்கையில் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

நம்முடைய சிந்தனை வேண்டுமானால் எதிர்காலத்தை பற்றியதாக இருக்கலாம். ஆனால் மகிழ்ச்சி இன்றைக்கானதாக இருக்க வேண்டும். நாம் ஒன்றும் சாகாவரம் பெற்றவர்களில்லை எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு கொள்வதற்கு.

ஐஸ்க்ரீம் உருகி முடிப்பதற்குள் மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் அதை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டால் விளங்கி விடும் வாழ்க்கையின் தத்துவம்.

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

SCROLL FOR NEXT