எதிர்மறை மனோநிலை ;
''நானெல்லாம் எங்கே வாழ்க்கையில் முன்னேறப் போறேன்? எனக்கெல்லாம் எப்ப வெற்றி கிடைக்கப் போகுது? நான் எந்த வேலையை தொட்டாலும் நிச்சயம் அது தோல்வியிலதான் முடியும்'’ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை ஒருவர் தனக்குள்ளே வளர்த்துக் கொண்டால் எப்போது வெற்றி காணமுடியும்? வெற்றி பெறுவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
தவறான கண்ணோட்டம்;
சிலர் எப்போது பார்த்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் அதிர்ஷ்டத்தின் மீது பழி போடுவார்கள். வாழ்வில் வென்ற மனிதர்களைப் பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருப்பார்கள். ''அவங்களுக்கெல்லாம் நல்ல அதிர்ஷ்டம். அவங்க ஜாதகம் நல்லா இருக்கு. அதனால தான் அவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகுது'’ என்பார்கள்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்களது மனோநிலைதான். ''நம்மால் முடியாது. நமக்கு கிடைக்காது'’ என்கிற எதிர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டதால்தான் அவர்களால் வெற்றியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
உண்மையான முயற்சிகளுக்கு பலன் நிச்சயம்;
உழைக்காமல், முயற்சி செய்யாமல் யாருக்கும் வெற்றி கிடைத்து விடாது. முதலில் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் இது நமக்கு கிடைக்குமா கிடைக்காதா, நம்மால் செய்ய முடியுமா என்றெல்லாம் சந்தேகப்படாமல் என்ன வேண்டுமோ அதை உறுதியாக நினைக்க வேண்டும். பின் அதை அடையும் வழிகளை பற்றி யோசிக்க வேண்டும். அதைப்பற்றி தெரிந்து கொள்ள நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். பின்பு காரியத்தில் இறங்க வேண்டும். உண்மையான முயற்சிகளுக்கு பலன் நிச்சயம் உண்டு.
நேர்மறை மனோநிலை;
வெற்றி பெறுபவர்கள் எல்லாம் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை ஆழமாக மனதில் பதிய வைக்கவேண்டும். மனோநிலை மாறினாலே எண்ணங்கள் நேர்மறையாக மாறும். அது ஒருவரை அவர் அறியாமலேயே முயற்சி செய்ய வைக்கும். சிறு சிறு வெற்றிகள் கிடைத்த பின்பு அவர் தன்னை இன்னும் ஆழமாக நம்ப ஆரம்பிப்பார். அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பெரிய இலக்குகளை அடைய முயலும்போது, தடைகளும், சிரமங்களும் வழியில் குறுக்கிடும். அவற்றை பொருட்படுத்தாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
அனுபவப்பாடங்கள்;
தோல்விகள் எதிர்ப்படும்போது துவண்டு போகாமல் ''இவை எனக்கான அனுபவப்பாடங்கள்'’ என எடுத்துக் கொண்டால், மறுமுறை அவை வெற்றிகளாக மாறுவது உறுதி. அதே போல பிறரின் அனுபவங்களில் இருந்தும் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்.
நேர்மறை மனோநிலையை ஒருவர் கடைப்பிடித்தால் அவர் வாழ்வில் வெல்வது உறுதி.