Motivation Image pixabay.com
Motivation

இந்த ஒன்றை மட்டும் விட்டுக் கொடுத்து பாருங்களேன்! வாழ்க்கை மகிழ்ச்சியாகும்!

நான்சி மலர்

ந்த உலகத்தில் இருக்கும் மக்கள் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப் பாருங்களேன்.

“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று ஒருவரும் கூற மாட்டார்கள்.

எல்லோருமே தனக்கு ஏதோ பிரச்சனையிருப்பதாகவே கூறுவார்கள். அதையே முழுமையாகவும் நம்புவார்கள்.

அதற்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் கிடையாது. பணக்காரர்கள் ஏழையை பார்த்தும், ஏழைகள் பணக்காரர்களை பார்த்தும் பொறாமைப் படுவதுண்டு. அவர்களிடம் இருக்கும் ஒன்று நம்மிடமில்லை என்று நினைப்பதுண்டு. அது பணம், பொருள், நிம்மதி, ஆரோக்கியம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அந்த ஒன்று தான். அது என்னவென்று கேட்கிறீர்களா? நம் வாழ்க்கையில் எப்போதும் அந்த ஒன்றை தேடியே அலைந்து நிம்மதியை தொலைக்கிறோம்.

உணவருந்த உட்காரும் பொழுது உங்கள் மேஜையில் எத்தனை உணவிருந்தாலும், உங்கள் கைக்கு எட்டாத அந்த ஒரு உணவை உண்ண வேண்டும் என்றே எண்ணம் தோன்றும்.

உங்களிடம் எத்தனை உடையிருந்தாலும், உங்களால் வாங்க முடியாத விலை மதிப்புள்ள அந்த ஒரு உடை கிடைக்கவில்லையே என்ற எண்ணமே மனதில் ஆதங்கமாக இருக்கும்.

உங்களை சுற்றி எத்தனையோ பேர் நண்பர்கள், குடும்பம் என்று அவர்களின் காதலை கொடுத்தாலும், அந்த ஒரு நபர் கொடுக்க மறுத்த காதலே உயர்ந்ததாக தோன்றும்.

நம்மிடமிருப்பதை விட பக்கத்து வீட்டுகாரரோ, எதிர்வீட்டுக்காரரோ வைத்திருக்கும் பொருள் கண்களை உறுத்தும்.

எப்போதும் நமக்கு எது கிடைக்கவில்லையோ, எது நம் கைக்கு எட்டவில்லையோ? அதன் மதிப்பே அதிகமாக தோன்றும். ஆனால் கையில் அதை விட மதிப்புமிக்க விஷயங்கள் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனெனில் அது நம்மிடமிருக்கிறது நம்மை விட்டு போகாது என்ற நம்பிக்கையும், அலட்சியமும் தான் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களை உதாசீனப்படுத்துவதற்கு காரணம். இதுவே நம் துன்பத்திற்கும் காரணமாகும்.

எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விடாப்பிடியாக, போக விடாமல் பிடித்து வைத்திருக்கும் அந்த ஒரு விஷயத்தை விட்டு விடுங்கள். அப்படி அந்த ஒரு விஷயத்தை விட்டு விட்டால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். ஆனால் அந்த ஒன்றை விடாமல் வாழ்க்கை முழுவதும் துரத்தி சென்றீர்களேயானால், வாழ்க்கையில் துன்பங்களோடு வாழ வேண்டிவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை நல்லப்படியாக வாழ்வது சுலபமே. நாம் தேர்தெடுக்கும் பாதையே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT