Motivation Image Image credit- pixabay.com
Motivation

இது தெரிந்தால் போதும்… உடலும் மனமும் திடமாகும்!

கல்கி டெஸ்க்

-மரிய சாரா

காலப்போக்கில் எல்லாவற்றிலும் மாற்றங்களை கண்டுவருகிறோம். வளர்ச்சிகளையும் பார்க்கிறோம். நாமும் அனைத்திலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறோம் என்று கூட சொல்லலாம். அதைப்போலவே நம்மைச்சுற்றி சமூக சீர்கேடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதும் வேதனைகுரிய உண்மை. எந்த அளவிற்கு நாம் தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியை கண்டுவருகிறோமோ அதே அளவிற்கு நமது பாதுகாப்பு என்பதும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக்கொண்டே வருகிறது.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதைப்போன்ற உணர்வு நமக்குள் இருப்பதை மறுக்க முடியாது. பிள்ளைகளை வெளியில் விளையாட விடுவதற்கு பயம், தனியே இருட்டிய பிறகு வெளியில் சென்று வீடு வரும் வரை பயம். இப்படிப் பல.

ஆழமாக சிந்தித்தால் சிறுபிள்ளைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் கூட தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு என்பது இன்றைய இந்த சூழலில் மிக மிக முக்கியமான தாகிறது. அனைத்து நேரங்களிலும் பாதுகாப்பிற்கு என யாரோ ஒருவர் நம்முடன் இருக்க வாய்ப்பில்லை.

ஆதலால், ஒவ்வொருவரும் தனக்கு ஒரு பிரச்சனை நேரிடும் போது, அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் தற்காப்புக்கலைகள் தெரிந்து வைத்திருப்பது அத்தியாவசியம்.

தற்காப்பு கலைகள் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்தே வலிமைப்படுத்திக்கொள்ள உதவுகின்றன. ஒருவரின் உடலும் மனமும் திடமானவைகளாக இருந்துவிட்டால் பின் அவர் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

நம் பிள்ளைகளை சரித்திரத்தில் இடம்பிடிக்கும் சாதனையாளர்களாக வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதைப்போலவே அவர்களை தனித்து எந்த சூழலையும் எதிர்கொள்ளும் திறமை படைத்தவர்களாக வளர்ப்பதும் மிக முக்கியமானதுதான். சிலம்பம், கராத்தே மற்றும் ஏனைய தற்காப்பு கலைகளை நாம் நமது பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

கல்வி, பாட்டு, நடனம், ஓவியம், கால்பந்து, கிரிக்கெட் என எதை வேண்டுமானாலும் பிள்ளைகள் அவர்கள் விரும்பியதையெல்லாம் கற்றுக்கொள்ளட்டும். அவற்றைப்போலவே சொல்லப்போனால் அவற்றில் எல்லாம் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தை  பிள்ளைகள் தற்காப்பு கலைகள் கற்பதில் காட்டுவதற்கு பெற்றோர்களாகிய நாம்தான் ஊக்குவிக்க வேண்டும்.  

சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, எந்த வயதிலும் கலைகளை கற்க முடியும். ஆர்வமும் மனதில் தீராத ஆசையும் இருந்தால் போதும். இப்படி தற்காப்புக்கலைகளை கற்றுக்கொண்டு நன்கு தேர்ந்த பின், மற்றவர்களுக்கும் இவற்றைக் கற்றுக்கொடுக்கலாம்.

தெரியாதவர்களிடம், புதிதாக பழகுபவர்களிடம் என்று தேவைப்படும் இடங்களில் ஒரு அடி தள்ளி நின்று பேச அல்லது பதில் கூற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.  

தெரியாதவர்களிடம் எதையும் வாங்கக்கூடாது, பெற்றோரிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்பன போன்ற சில விஷயங்களையும் நாம் நமது பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கையால் தடுத்து காத்துக்கொள்ளும் கராத்தேவாக இருக்கலாம், கோலெடுத்து சுழற்றி அடித்து விளையாடும் சிலம்பமாக இருக்கலாம், வாள் வீசும் சண்டைப்பயிற்சியாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அது கயவர் களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் கவசம் என்பதை அறிந்து செயல்படுவோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT