சிலர் மகான்களை தரிசிப்பார்கள். ஆனால் அவர் சொல்வதை கேட்க மாட்டார்கள். காஞ்சி மகானின் ஜென்ம நட்சத்திர விழாவில் ஒரு பெண்மணி பட்டுப் புடவையில் வந்தார். அவரை ஒருவர் "நீங்கள் காட்சி மகானின் பக்தை சுவாமி பட்டுக்கு எதிர்க்கட்சி ஆயிற்றே. புழுவைக் கொன்று உற்பத்தியாகும் பட்டை கட்டாதீர் என அவர் கூறுவாரே" என்றார்.
அதற்கு அவர் பக்தி பண்ணுவதற்கும் பட்டு கட்டுவதற்கும் என்ன சம்பந்தம். எம்.எஸ்.அம்மா கூடத்தான் பட்டு கட்டறாங்க. அவரும் மகானின் பக்தைதானே என்றார். ஆனால் அந்த அம்மாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டிருந்தால் அவர் அதை விட்டிருப்பார் நியாயப்படுத்த மாட்டார் என்றாராம் கேள்வி கேட்டவர். மகா பெரியவரின் பாதங்களுக்கு பூஜை செய்கிறவர்கள், அவர் பாதையை பின்பற்ற தயங்குவார்கள். மகான்களின் பாதங்களை விட அவர் பாடங்களே முக்கியம்.
சீனத்து ஞானி சுவாங்த்ஸீ சொல்கிறார் "காட்டில் இருட்டில் பாதையை தவறவிட்டு, வழி தெரியாமல் தவிப்பவன், மின்னல் அடிக்கும்போது பாதையைப் பிடித்துக் கொள்கிறான்" என்றார். என்ன அழகான உவமை. நமது வாழ்க்கை குழப்பமே காடு. நம் அறியாமையே இருட்டு. புத்தர், வள்ளலார், ரமணர் போன்ற ஞானிகள் வருகைதான் மின்னல். அப்படி மின்னலடிக்கிறபோது பாதையை பிடித்துக் கொள்ள வேண்டுமே தவிர, முட்டாள்தனமாக மின்னலை ரசிப்பதா. மின்னலைப் பார்க்கிறவன் குருடனாகிறான்.
ஆளுக்கொரு குரு. ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து மின்லையே கொண்டாடுகிறார்களே தவிர, மின்னல் காட்டும் பாதையை பிடித்துக் கொள்வதே இல்லை. பகவான் இராமகிருஷ்ணருடைய மனைவி சாரதா தேவி இராமக்ருஷ்ணர் புற்றுநோய் தாக்கி மரணம் அடையும் சமயம் ஒரு சராசரி பெண்ணைப் போல் அழத்தொடங்கினார். அவர் அவளை அழைத்து "நான் சாகப் போவதில்லை. என் உடைகள் பழசாகிவிட்டால் நான் முதுமை அடைந்து விட்டேன் என அர்த்தமா. அவை கிழிந்து விட்டால் நான் கிழிந்து போனேன் என அர்த்தமா. புத்தம் புதிய துணி போட்டால் இளமையாகிவிடுவேனா. உடல் வேறு. உடை வேறு. என் உடல் நோய்க்கு மரணம் வரும். ஆத்மாவுக்கு மரணமில்லை. உடை கிழிவதுபோல் நோய் வந்துள்ளது. டாக்டர்கள் உடையைப் பற்றிக் கவலைபடுகிறார்கள். ஆனால் நீ என் ஆன்மாவோடு தொடர்புள்ளவள். எனவே நான் சாகவில்லை என எப்போதும் போல் இரு" என்றாராம்.
சாரதா தேவி அவர் கூறியது போல் வாழ்வை வாழ்ந்தார். வெறும் உடைகளே சாகக் கூடியவை நானல்ல என்ற வார்த்தை சாரதாதேவியை புனிதவதி ஆக்கிவிட்டது. அவர் கிடைத்த மின்னலின் பாதையைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார். மின்னலையே பிடித்துக் கொண்டு வாழ்பவர்கள் குருடாகிப் போவார்கள். மகான்கள் காட்டும் பாதையை பிடித்துக் கொண்டால் எப்போதும் சந்தோஷம்தான்.