நாம் எப்பொழுதும் நல்ல நட்பு வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையின் அரிச்சுவடி என்பது தவறான நட்பை தவிர்ப்பது - சத்திய சாய்பாபா
ABC of life is Avoid bad company - Sathya Sai Baba
நல்ல நட்பு வட்டமானது, நம்மை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்லும். கெட்ட நட்பு வட்டம் நம்மை தவறான பாதையில் செல்ல வழி வகுக்கலாம்.
இதனைத்தான் பின்வரும் ருசிய பழமொழி கூறுகிறது.
உனது நண்பர்களைப் பற்றிக் கூறு. நான் உன்னைப் பற்றி கூறுகிறேன் - ருசிய பழமொழி
இதற்கென வள்ளுவர் தனியாக தீ நட்பு என்ற ஒரு அதிகாரத்தை எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து கூடா நட்பு என்று மேலும் ஓர் அதிகாரத்தை எழுதியுள்ளார். தீ நட்பு பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது - 811
பொருள்- அன்பு பெருக்கெடுத்து பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது
நாம் நம்மைச் சுற்றிலும் நல்வழிப்படுத்தும் நல்லதொரு நட்பினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்
ஒரு அரசருக்கு நல்ல ஒரு மதியூகி மந்திரி தேவைப்பட்டார். அந்தப் பதவிக்கு பல்வேறு அறிவாளிகள் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டன. பன்மொழிப் புலமை, நல்லதொரு படிப்பு, அரசியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் அவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டன.
இறுதியில் இருவர் எல்லாவற்றிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இறுதிச் சுற்றுக்கு வந்தனர்.
அந்த இருவரில் யாரை மந்திரியாக தேர்ந்தெடுப்பது என்று அரசருக்கு குழப்பமாக இருந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதைப்போல் விளங்கினர். எனவே தனது அரசவையில் இருவரையும் அருகருகே அமர வைத்து அவர்களில் சிறந்தவரை மந்திரியாக நியமிக்க அரசர் திட்டமிட்டார்.
அரசவையில் அப்பொழுது ஒரு தண்டனைக் கைதி அரசரின் முன் நிறுத்தப்பட்டான். அவனுடைய குற்றங்கள் பற்றி தெரிவிக்கப்பட்ட பின்னர், அரசர் அவனுக்கு தண்டனை விதித்தார். அப்போது அந்த தண்டனை கைதி அரசருக்கு புரியாத அவனது தாய்மொழியில் அரசரைப் பார்த்து கோபமாக ஏதேதோ கூறினான்.
அப்பொழுது அந்த மந்திரி போட்டியில் இறுதிச் சுற்றிலிருந்த முதலாமவர் பின்வருமாறு கூறினார் -
"அரசரே! தங்களது தீர்ப்பில் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. உங்களிடம் அவனது தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கூறுகிறான்" என்றார் முதலாமவர்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு இறுதிச்சுற்று போட்டியாளரான இரண்டாமவர் பின்வருமாறு கூறினார்
"இல்லை மன்னா. இவன் பொய் சொல்கிறான். அந்தத் தண்டனைக் கைதி உங்களை கன்னா பின்னாவென்று திட்டுகிறான்" என்றார் இரண்டாமவர்.
அரசர் அப்போது ஒரு முடிவு எடுத்தார். தன்னை நல்வழிப்படுத்திய அந்த முதலாமவரை மந்திரியாகத் தேர்ந்தெடுத்தார்.
அந்த தண்டனைக் கைதி தன்னைத் திட்டி இருந்தால் கூட, சந்தர்ப்பத்தில் நடந்த விஷயத்தை சரியாக புரிந்து கொண்டு, தன்னைத் தூண்டி விடாமல் தன்னை நல்வழிப்படுத்திய முதலாமவர்தான் தனக்கு சிறந்த மந்திரியாக இருப்பார் என்று அரசர் முடிவு செய்தார்.
எனவே, அத்தகைய நல்வழிப்படுத்தும் நட்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தீய நட்புகளை விட்டு விலகி இருக்க வேண்டும்.
தீயவர்களுடன் நட்பாக இருப்பதை விட, நட்பில்லாமல் தனியாக இருப்பது மேலானது -வேதாத்திரி மகரிஷி
நல்ல நட்புகளை உருவாக்கிக் கொள்வோம். தீய நட்புகளிலிருந்து விலகி இருப்போம். வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.