நாம் சந்திக்கும், பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளம். அவற்றில் சில…
உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர், சிலர் நிலைமை புரிந்துக்கொண்டு, சிந்தித்து அளந்து பேசுவார்கள், தேவைக்குத் தோதாக.
அடுத்த வீடு, எதிர் வீட்டில் (இன்றைய கால கட்டத்தில் (flats) பிளாட்ஸ்) வசிப்பவர்கள் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் நமக்கு உபயோகப்படலாம்.உதாரணத்திற்கு, எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது.
உறவினர் வீட்டில் எல்லோரும் பொருட்களை அதன் தேவை முடிந்ததும், எடுத்த இடத்தில் வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கிறார்கள். இதை ஒரு கடமையாக பழகிக்கொண்டு விட்டார்கள்.
நண்பர் வீட்டில் வெளியூர் போய் வந்ததும், சிரமப்படாமல் சூட்கேஸ்களில் (suitcase) உள்ள பொருட்களை உடனுக்குடன் எடுத்து வைத்து பெட்டியைப் பூட்டி, சாவிகள் கொத்தை பத்திரப்படுத்தி வைக்கின்றார்.
அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், சுழற்சி (recycling method) முறையை, எங்கு எங்கு முடியுமோ அங்கு உபயோகிக்கிறார். தன்னுடன் பணிபுரிபவர்களுக்கும் பின்பற்ற உற்சாகப் படுத்துகிறார்.
அனுபவம் மிக்க ஒருவர், பாராட்டுதல்களை உடனுக்குஉடன் தெரிவிப்பதை மறக்காமல் செய்து, மகிழ வைக்கிறார். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அந்த மங்கை பொறுமையையாக பதிலும், விளக்கமும் கொடுக்கிறார். தெரியாவிட்டால் ஈகோ பார்க்காமல் தெரியாது என்று உடனுக்குஉடன் கூறி, பிறகு தெரிந்துகொள்ள முயற்சி செய்து கேள்வி, விளக்கம் கேட்டவர்களுக்கு கூறி, நன்றியும் சொல்கின்றார்.
பிறர் உரையாடும்பொழுது பொறுமையுடன் கேட்டு, அமைதி காத்து தங்கள் கருத்துகளைக் கூறுகிறார் ஒரு பொறுமைசாலி.
பிறருக்குத் தங்களால் முடிந்த உதவிகள் செய்யும் பல நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள், நம்மை சுற்றி.
பிறரைப் பார்த்து ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்தாலோ, பின்பற்றி பலன் பெற்றாலோ, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, மறக்காமல் மனதார நன்றி கூறி பாராட்டுபவர்கள் உண்டு
முடியும் என்ற மனோபாவத்துடன் முயற்சி செய்பவர்களை நாம் அறிவோம். அப்படி முடியாவிட்டால், அதிக வருத்தப்படாமல் அந்த நிகழ்வால் ஏற்படும் அனுபவத்தில் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற செய்கிறவர்களும் இந்தப் பூமியில் உண்டு.
மனிதர்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒரு ரகம்! ஆணோ, பெண்ணோ, இளைஞரோ, முதியவரோ, அனுபவம் அற்றவரோ அனுபவம் மிக்கவரோ, ஏழையோ, பணக்காரரோ... அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். அவை கற்றுக்கொடுத்த பாடங்கள் எக்கச்சக்கம். அவர்களிடம் உரையாடி அறிந்துகொள்வது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இப்படிப்பட்ட உண்மையான தனிப்பட்டவர்களின் அனுபவங்கள், புத்தகங்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு தனி மனிதரிடமும் இருந்து, தொடர்ந்து கற்றுக்கொண்டு எங்கு, எப்படி தேவையோ அதற்கு ஏற்ப உபயோகித்தால், நாம் பலன் பெறலாம். நமக்கு மன நிறைவும் கிட்டும். அனுபவமும் கூடும். வாழ்க்கை மேம்படும்!