கடந்து வந்த பின்பே உணர்கிறோம் நம்மை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல. வாழ்க்கையை வடிவமைத்த காலமென்று. தோல்வியுற்று கலங்கி நின்ற பொழுது, அதிகம் பயிற்சியும், முயற்சியும் தேவை என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு விடிவெள்ளியை நோக்கி புறப்படும் போதுதான் தெரிந்தது இவையெல்லாம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று.
வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றாலும் தொடர் முயற்சியுடன் போராடி முன்னேறிச் செல்லும் பொழுது நாம் விரும்பிய இடத்தை அடைந்து விடுகிறோம். சூழ்நிலைகள் மாறும் பொழுதுதான் நம்மால் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான முகங்களைக் காண முடிகிறது.
சூழ்நிலை மாறும்பொழுது நம்மைச் சுற்றி உள்ளவர்களின் நடவடிக்கைகளும், வார்த்தைகளும் மாறுவதும், நம்மை புறக்கணிப்பதும், புண்படுத்துவதும் கண்டு கலங்கி நின்ற பொழுது உண்மையான அக்கறையுள்ள நட்பையும், உறவையும் காண முடிந்தது. கலங்கடித்த காலம் எல்லாம் கடுமையான காலம் அல்ல வாழ்வை வடிவமைத்த காலம் என்று உணர முடிந்தது.
தவறு செய்யாத மனிதனும் இல்லை. தவறு என்று தெரிந்தும் மீண்டும் அதனை செய்யாமல் இருப்பவனே மனிதன் என்பதை உணர்ந்து கொள்ள நேரம் பிடித்தது. ஆனால் அந்தத் தவறை சுட்டிக்காட்டி, குத்திப் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி கலங்கடிக்கும் உறவுகளை ஒதுக்க கற்றுத் தந்தது அந்தக் காலம்தான். கலங்கடித்த காலம் எல்லாம் கடுமையான காலம் அல்ல வாழ்வை வடிவமைத்த காலம் என்று அப்பொழுதுதான் உணர முடிந்தது.
நம்மால் இதை செய்ய முடியாது என்று சொல்பவர்கள் முன் இதை எப்படி செய்தாய் என வியக்கும் வண்ணம் முன்னேறுவதே காலம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். கவிஞர் வாலி அவர்கள் கூறியதுபோல் "கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம். இந்த மூன்றுமே இருந்தால் தலைவனாகலாம்!
நம்மோடு ஒன்றாகப் பயணித்து பின் அவர்களுக்கான தேவை முடிந்ததும் ஒதுங்கிப் போனவர்களைத் தேட வேண்டாம். வாழ்வின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்தவர்கள் இவர்கள்தான். கடந்து வந்த காலமெல்லாம் நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று அப்போதுதான் புரிந்தது. கடக்க வேண்டிய பாதையைக் கண்டு மலைக்காமல் முன்னேறிச் செல்வதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை புரிய வைத்த காலம் என்று!
வெற்றி பெறும்வரை யார் எது சொன்னாலும் நம் முகத்தில் இருக்க வேண்டியது புன்னகையும், மௌனமுமே. மனதில் இருக்க வேண்டியது முயற்சியும், பயிற்சியும், நம்பிக்கையும் மட்டுமே.
வாழ்வில் முன்னேறி வெற்றிபெற வாழ்த்துக்கள்!