உள்ளுணர்வு (Intuition) சொல்வதைக் கேளுங்கள். உள்ளுணர்வு என்பது திடீரென தோன்றும் உணர்வல்ல. ஒவ்வொரு செயலினூடும் உறைந்துள்ள மெல்லிய பண்பாகும். அது நம்மை அறியாமலே நம் ஆழ்மனதில் பதிவாகும் எண்ண ஓட்டங்களாகும். இது ஒவ்வொருவரின் நம்பிக்கைகளின்படி அமையும். உள்ளுணர்வு நம்மை நல்ல வழியில் வழிநடத்த உதவும். சில சமயம் நம் உள்ளுணர்வு சிலரைப் பார்த்ததும் இவர் நல்லவர் என்று கூறும். அவருடன் பழகி பார்க்க உண்மையிலேயே அவருடைய நல்ல குணம் தெரியும்.
நம் எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்பொழுது நம் உள்ளுணர்வு நேர்மறையாக சொல்லும் பொழுது அவை நம்மை உற்சாகப்படுத்தி அந்த செயலில் முழுமையாக ஈடுபட வைக்கும். நம்மை ஆக்கபூர்வமாக செயல்படத் தூண்டும். பல தருணங்களில் நம்முடைய கடந்த காலம், அனுபவம், மனத்தெளிவு போன்றவற்றால் உள்ளுணர்வின் செயல்பாடுகள் அமையும்.
முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் நம் உள்ளுணர்வின் பேச்சைக் கேட்பதும், சில இடங்களில் நாம் செல்லும்போது நம் உள் உணர்வு எச்சரிக்கும். அந்த சமயங்களில் அங்கு செல்வதை தவிர்த்து விடுவதும் நல்லது. அப்படிப்பட்ட பாதுகாப்பை பற்றிய உள்ளுணர்வை அலட்சியம் செய்ய வேண்டாம். கனவு நிலைகளில் சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இதுவும் நம் உள்ளுணர்வின் செயல்பாடுதான்.
நம் உள்ளுணர்வு எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் நம் செயல்களையும், ஆளுமையும் நிர்ணயிக்கும். நம் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் மற்றும் நேர்மறையான உணர்வுகள் இருந்தால் நம்முடைய வாழ்க்கை சூழலும் அவற்றை பிரதிபலிக்கும். எனவே நம் உள்ளுணர்வை நல்லபடி வடிவமைக்க நம் வாழ்க்கையும் அதற்கு ஏற்ப அமையும். வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை வெளியில் காண விரும்பினால் முதலில் நம் உள்ளத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.
உள்ளுணர்வு நம்மை சரியான வழியில்தான் அழைத்துச் செல்லும். உள்ளுணர்வில் நம்பிக்கையை ஆழப்படுத்த நம்மால் வாழ்வில் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி போன்றவை சிறந்த முறையில் உதவும். தியானத்தில் நம் எண்ணங்கள் இயல்பாக வந்து செல்லும். தியானம் நம் விழிப்புணர்வை பயிற்றுவிக்கவும், ஆரோக்கியமான முன்னோக்கை உருவாக்கவும் உதவும். நம் சுவாசத்தில் கவனம் செலுத்தி தியானம் செய்ய உள்ளுணர்வின் மூலம் நம்மால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
நம் அனைவருக்கும் உள்ளுணர்வு உண்டு. அது நம் உண்மையான திறனை அடைய உதவும். உள்ளுணர்வை அணுகுவதும், பயன்படுத்துவதும் மிகவும் சிறந்த சக்தி வாய்ந்த திறமையாகும். நம் உள்ளுணர்வின் மூலம் பிரச்னைகளை எளிதில் தீர்க்கவும், துன்பத்தை துடைக்கவும், இலக்குகளை உருவாக்கி அதை நோக்கி செல்வதும் எளிதாகும்.
உள்ளுணர்வு சொல்வதை கேட்போமா?