motivaton image Image credit - pixabay
Motivation

நிம்மதிக்கான 6 வழிகள்!

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

னிதனின் அதிகபட்ச விருப்பமே நிம்மதியோடு வாழ்வதுதான். அந்த நிம்மதிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறான். நிம்மதி எங்கெல்லாம் கிடைக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவனாகவும் இருக்கிறான். அதை தேடித் தேடி அலைந்து ஓய்ந்து விடுகிறான். ஆனால் நான் இப்பொழுது கூறப்போகும் பழக்கவழக்கங்களை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்தாலே அவனுக்குத் தேவையான நிம்மதி தானே தேடி வந்து அமர்ந்து கொள்ளும்.

மகிழ்ச்சி மனதிற்குள்

நமக்கு தேவையான மகிழ்ச்சியை பிறர் வழங்க முடியாது. அது நமக்குள்தான் இருக்கிறது. மாபெரும் மாளிகையில் வசிக்கும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்ல முடியாது. குடிசையில் வசிப்பவர்கள் கூட தமக்கு தேவையான மகிழ்ச்சியை மனதிற்குள் வைத்து நிம்மதியாக இருப்பதை அவர்களது   முகத்தின் பிரகாசத்தை பார்க்கும்போது தெளிவாக தெரியவரும். அது அவருடைய மனதிற்குள் இருந்துதான் வரவேண்டும். எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் என்ன கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி சந்தோசமாக இருப்பேன் என்று தீர்மானம் செய்து கொள்ளும் நபர் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக வாழ இதெல்லாம் வேண்டும் என்று பெரிய பட்டியல் போடும் மனிதரால் நிம்மதியையோ சந்தோசத்தையோ பெற முடியாது.

இந்த நிமிடமே இனிமையானது

மனிதர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு நிகழ்காலத்தில் வாழாமல் நடந்ததையும் இனிமேல் நடக்கப் போவதையும் நினைத்து இருப்பதுதான். எப்பொழுதும் கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கத்தையும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளையும் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களால் நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாது. அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிமிடம் அவர்கள் நினைத்தால் அவர்களுக்கான சந்தோசமான நிம்மதியான நிமிடங்களாக இந்த நிமிடத்தை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அதை விடுத்து ஏக்கங்களையும் கவலைகளையும் சுமந்துகொண்டு இருந்தால் நிம்மதிக்கு இடமே இல்லாமல் போய்விடும். இந்த நிமிடம் மிகவும் இனிமையானது. நான் இதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்பவர்கள் நிம்மதியை அடைகிறார்கள்.

பிறரை மதிப்பிடாமல் தவிர்ப்பது தவறாக மதிப்பிடுவது

ஒருவருடன் பழக ஆரம்பிக்கும்போதே அவரைப் பற்றி மதிப்பீடு செய்கிறார்கள் பலர். அந்த அளவுகோலை மனதில் வைத்துக் கொண்டு அவருடன் பழக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவர் இல்லை எனும்போது அவர் மேல் வெறுப்பு வருகிறது. அதைவிட குறுகிய காலப் பழக்கத்தில் ஒருவருடைய நற்பண்புகளோ, தீய பண்புகளோ அவ்வளவு சீக்கிரம் வெளியில் வராது. அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பழக நேரும்போதுதான் ஒருவரைப் பற்றி தெளிவாக மதிப்பிட முடியும்.  சில சமயங்களில் நல்லவர்களாக தோன்றுபவர்கள் பல சமயங்களில் தீயவர்களாக நமக்கு கண்ணில் தென்படுகிறார்கள். கெட்ட குணங்கள் கொண்ட மனிதர்கள் கூட சமய சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நல்லவர்களாக மனம் மாறுவதை நாம் காண முடிகிறது. அப்படி இருக்கும்பொழுது எப்பொழுதும் அவர்களுடைய நிலையிலிருந்தும் யோசிக்க வேண்டும்.

நன்றி உணர்வுடன் இருப்பது

பெரிய பதவியிலோ அல்லது சிறிய வேலையிலோ இருந்தாலும் சரி அரண்மனையில் அரசனாக வசித்தாலும் சரி ஆண்டியாக  தெருவில் வசித்தாலும் சரி உங்களுக்கு இந்த வாழ்க்கை கிடைத்ததற்காக மனதார இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் என்னை நன்றாக வைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வு எப்பொழுதும் இருக்க வேண்டும் .வாழ்க்கையில் இன்னும் இன்னும் வேண்டுமென்று ஏங்குவதை விட இன்று இப்பொழுது எனக்கு இது கிடைத்ததே சரி என்று கிடைத்ததை நினைத்து நன்றி பாராட்டும் போது நிம்மதி தானாக வரும். நன்றியுணர்வே வாழ்வில் பல ஏற்றங்களைத் தரும்.

காத்திருக்கும் பொறுமை வேண்டும்

எந்த விஷயத்திலும் முன்னேற்றமோ வெற்றியோ கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருத்தல் அவசியம். வரலாற்றில் இடம் பெற்ற பல்வேறு சாதனையாளர்களுக்கு வெற்றி ஒரே நாளில் கிடைத்து விடவில்லை . நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்று முயற்சி செய்து காத்திருந்த பின்புதான் அந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள். ஆதலால் சாமானியன் தொடங்கி சாதனையாளர் வரை எந்த மனிதரும் வாழ்க்கையில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேறிய சரித்திரம் இல்லை. நாம் ஆசைப்பட்டதை அடைய அதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் புதிய நாளே

பள்ளிக்குச் செல்லும் குழந்தை ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை எதிர்பார்த்துதான் செல்லும். அதே போல வாழ்க்கை என்ற பள்ளிக்கூடம் தினம் தினம் புதிய அனுபவங்களையும் புதிய புதிய பாடங்களையும் தரும். அதேசமயம் தேவையான வாய்ப்புகளையும் வழங்கி முன்னேற்றத்தையும் தரும். அவற்றை நாம் சரியான முறையில் கண்டறிந்து நம்முடைய வாழ்க்கையில் அவற்றை பயன்படுத்திக் கொண்டு இயல்பாக இருப்பவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT