பிறருக்கு அறிவுரை, ஆலோசனை வழங்குவது சுலபமானது. ஆனால், அவ்வாறு பின்பற்றுவது கடினமானது. எந்தச் செயலும், தொழிலும் அவ்வளவு எளிதானாதோ, சுலபமானதோ கிடையாது. நம்பிக்கை வைத்து, தொடர்ந்து முயற்சி செய்து, விடாப்பிடியாக பயிற்சி எடுத்து வரவேண்டும். பழகப்பழக கட்டுக்குள் வந்து செயல்படுத்துவது சுலபமாக தோற்றம் அளிக்கும். முயற்சி செய்யவும், வாழ்க்கையில் முன்னேறவும்.
நம்மை நாம் நம்புவதுடன், பிறரிடமும், அவர்கள் திறமைகளிலும் நம்பிக்கை வைப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளிடம் முழு நம்பிக்கை வையுங்கள். உங்கள் காலத்தில் நீங்கள் வளர்ந்த சூழ்நிலை இப்பொழுது இல்லை. எனவே, கால மாற்றத்திற்கு ஏற்ப, உங்களை மாற்றிக்கொண்டு வாழ பழக வேண்டும்.
வசதிகள், வாய்ப்புக்கள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், அன்றைய பல நல்ல பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன, என்பது மறுக்க முடியாத உண்மை. சில எளியமுறைகளை தாங்கள் கட்டாயமாக பழகிக்கொள்ளுங்கள். உடன் உங்கள் குழந்தைகளுக்கும் பழக்குங்கள்.
முதலில் தாங்கள் மொபைல் போன் தினமும் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் உபயோக்கிப்பதை நிறுத்துங்கள். (தாங்கள் விமானத்தில் இரண்டு மணி தூரப் பயணத்தில் பறந்துக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லது மிக முக்கிய அலுவலக மீட்டிங்கில் உள்ளீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கடினம்தான். பழகுங்கள். பிடிபட்டதும் அதன் நன்மைகள், உண்மைகள் புரியும்.
அடுத்தது, தாங்கள் டிவியில் சில சீரியல்கள் பார்ப்பதற்கு அடிமை என்றால், முதலில் குறைந்தபட்சம் இரண்டு சீரியல்களுக்கு குட் பை சொல்லுங்கள். முதலில் சுலபம் இல்லைதான். டிவி சீரியல் பார்த்து பயன் பெறப்போவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுங்கள். மறக்காமல் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொள்ளுங்கள்.
குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட விருப்பம், ஆர்வம் இருக்கும். அவற்றை மதிக்கவும், அவர்கள் முயற்சிகளைப் பாராட்டவும்:, உற்சாகப்படுத்தவும் பழகிக்கொள்ளுங்கள்.
எந்த வகை முடிவு எடுப்பது என்றாலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி ஆலோசித்து செய்யவும். ஒவ்வொருவரின் எண்ணம், சிந்தனை, யோசிக்கும் திறமை, பிரச்னையை வேறு கோணத்தில் பார்க்கும் அனுபவம் என்பதற்கு பதிலாக இருவரது கலந்தாலோசித்து எடுத்த முடிவாக இருந்தால், நன்மை பயக்கும். அவ்வாறு சேர்ந்து கலந்து ஆலோசிக்க பழகுங்கள். குழந்தைகளிடமும் கலந்து ஆலோசிக்கலாம்.
இந்தக் காலத்திய நவ நாகரிக, வெகுவேகமாகச் செல்லும் வாழ்க்கை முறையில் உங்களுக்குத் தெரியாத, அறியாத பல விஷயங்கள், உங்கள் குழந்தைகளுக்குத் தெரிந்து இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அவற்றை பற்றி சிறிதும் தயங்காமல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள பழகுங்கள்.
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட, செல்போன் பற்றிய நுணுக்கமான விஷயங்கள், இந்தத் தலைமுறையினருக்கு நன்றாகத் தெரியும் என்பது மறுக்க முடியாதது. காலத்தின் வேகம் நிறைந்த மாற்றங்களை, அப்டேட் செய்து கொள்வதிலும் அவர்கள் வல்லவர்கள். இத்தகைய வாய்ப்பை நழுவவிடாமல் உபயோகித்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
முக்கியமாக, வீட்டு வேலைகளை எல்லோரும் பங்கு போட்டுக்கொண்டு, சுழற்சி முறையில் எல்லா வேலைகளையும் செய்ய பழகிக்கொண்டால் நாளடைவில் உங்கள் யாவருடைய தன்னம்பிக்கை (self confidence) இன்னும் வலுவடையும். விடா முயற்சி செய்து தொடர் பயன்பெறுங்கள்.
மேற்கூறியவற்றை தாங்கள் பழகிக்கொண்டு, உங்கள் குழந்தைகளுக்கும் பழக்கிவிட வேண்டியது தங்களுடைய கடமை. அவர்களை சிறு வயது முதலே இந்த விஷயங்களில் பழக்கப்படுத்தி விட்டால், எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.