Motivation Image
Motivation Image Image credit - pixabay.com
Motivation

கடின உழைப்பும், சரண்டர் ஆகும் வெற்றியும்!

சேலம் சுபா

The secret of change is to focus all of your energy, not on fighting the old, but on building the new. - SOCRATES.

மாற்றத்தின் ரகசியம் பழையதை எதிர்த்துப் போராடுவதில் அல்ல, புதியதைக் கட்டியெழுப்புவதில் உங்கள் ஆற்றல் முழுவதையும் மையப்படுத்துவதாகும். - சாக்ரடீஸ்

"குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டியது போதும் திறமைக்கு ஏத்த வேலையப் பாத்து லைப்ல முன்னுக்கு வா"  இது போன்ற டயலாக் நிச்சயம் எங்கேயாவது அல்லது யாரிடமாவது கேட்டிருப்போம். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பது முன்னேறுவதற்கு பணிகளை செய்வதற்கு பொருந்தாது. உழைப்பை போதும் என்று சொல்பவர்கள் ஒருநாளும் வெற்றி அடைய மாட்டார்கள்.

சிரமமான பணிகளை மேற்கொண்டு உழைப்பவர்களே படிப்படியாக முன்னேறுகிறார்கள். மிகவும் சுலபமான வேலைகளை செய்து வருவதே போதும் என்ற  மனதிருப்தி கொண்டவர்களுக்கு மிகவும் குறைந்த ஊதியமே கிடைக்கும். அதுமட்டுமின்றி அவர்கள் எண்ணத்துக்கேற்ற சாதாரண வேலைதான் அவர்களுக்கு கிடைக்கும்.

அவர்கள் செய்து வரும் வேலைகளில் அறிவிற்கும் திறமைக்கும் எந்த விதமான சவால்களும் இல்லாத காரணத்தினால்  எந்த விதமான வளர்ச்சியும் பெறாமல்  கீழ் மட்டத்திலேயே இருந்து  மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்று பணிகளை செய்யும் அடிமை சூழலில் மாட்டிக் கொண்டு வருந்துவார்கள்.

"எனக்கு மிகவும் குறைவான சம்பளம்தான் தருகிறார்கள். இந்த சம்பளத்திற்கு நான் இப்போது செய்து வரும் வேலை போதுமானது. நான் எதற்கு கடினமான வேலைகளை செய்யும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கஷ்டப்பட வேண்டும்" என்று தீர்மானித்து உயர் அதிகாரிகளின் பார்வையில் படாதபடி தன்னை மறைத்துக் கொண்டு வாழ்பவருக்கு  கட்டாயம் பணி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. மாறாக சிக்கல்கள் நிறைந்த கடினமான வேலைகளை செய்து முடிக்கும் பொறுப்புகளை தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு அவைகளை செய்து முடிப்பவர்களை தான் உயர் அதிகாரிகள் விரும்பி அவர்களுக்கு பணி உயர்வு கொடுக்க முன் வருவார்கள்.

உயர் அதிகாரிகளிடம் சென்று "நீங்கள் எனக்கு தந்திருக்கும் வேலை மிகவும் எளிதாக  இருக்கிறது. எனது திறமையை நிரூபிக்க இன்னும் கடினமான  வேலைகளை தாருங்கள்" என்று கேட்டு பெரிய பொறுப்புகளை சுமந்து கொள்ள முன்வருபவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம்.

ஆனால் அதே சமயத்தில் நம் திறமைக்கும் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய காரியத்தை வலிய ஏற்றுக்கொண்டு செய்வது சரியல்ல. அது "குருவி தலையில் பனங்காய் வைத்த கணக்காக" தோல்வியில்தான் முடிவடையும். தன்னால் முடியவில்லை எனும் தோல்வி நமது நம்பிக்கையை அழித்துவிடக்கூடும். அதற்கு மாறாக வெற்றி நம்பிக்கையை வளர்க்கும். ஆகையால் திறமைக்கு தகுந்த மாதிரி காரியங்களை தேர்ந்தெடுத்து அவைகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

இதனால் கிடைக்கும் அனுபவம் இன்னும் திறமையை வளர்க்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் செய்யக் கூடிய பெரிய காரியங்களை, செயல்களை செய்து வந்தால் நமது பொருளாதார நிலையை சீராக உயர்த்திக் கொண்டு செல்ல முடியும்.

அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல் நமது வாழ்வில் மாற்றம் வர நமது முழு சக்தியையும் குவித்து போராட வேண்டும். கடந்து போனவைகளுக்காக வருந்தாமல் முடியும் எனும் நம்பிக்கையுடன் திறமையை வளர்த்து பணியில் இறங்குங்கள். வருங்காலத்தை  வளமாக்கும் வெற்றி முழு சக்தியுடன் உழைப்பவர்களிடம் நிச்சயம் சரண்டர் ஆகும்.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT