motivation image Image credit - pixabay.aom
Motivation

உதவிகளை நாடி ஓடுபவரா நீங்கள்? ஏன் இந்த வம்பு?

கலைமதி சிவகுரு

ன்னம்பிக்கையில்தான் நம் உள்ளிருக்கும் தெய்வத்தன்மை வெளிப்படுகிறது. நம்மால் எதையும் சாதிக்கமுடியும். ஆனால், உழைக்காவிட்டால் தோல்விதான் வரும். தனி ஒரு மனிதன் தன்னம்பிக்கை இழந்துவிட்டால் மரணத்திற்குச் சமமான வாழ்க்கைதான். எத்தனை தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தாலும், நம்மிடம் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் முன்னேற முடியாது.

வாழ்க்கையின் ரகசியம் என்ன? நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பின், நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகி விடுகிறோம். நாம் பலவீனம் ஆனவன் என்று நினைக்கும்போது நம் பலம் குறைந்துவிடுகிறது. நாம் பெரும் மனபலம் உடையவர்கள். நாம் நல்லெதென்று பட்டதைச் செய்யவேண்டும் என்று நினைக்கும்போது பலம் நம்மிடம் வந்து சேரும். பிறர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், விமர்சிக்கட்டும், நாம் நம் நம்பிக்கையில் உறுதியாய் இருப்போம். நாம் உறுதியாக இருக்கும்போது எல்லாமே நமக்குக் கைகூடும்.

வெளியிலிருந்து உதவியை நாடி ஓடுவதெல்லாம் முட்டாள் தனம்தான் என்றார் சுவாமி விவேகானந்தர். பாரத நாட்டில் மாட்டு வண்டிகள் இருக்கின்றன. இரண்டு காளை மாடுகள் வண்டியை இழுக்கும். சில சமயம் ஒரு கட்டு வைக்கோலை ஒரு குச்சியில் குத்தி மாடுகளுக்கு முன்னால் தொங்கும்படி அந்த வண்டியில் கட்டி விடுவார்கள். அந்த வைக்கோல் மாடுகளுக்குத் தின்ன கிடைக்காது. மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன தொடர்ந்து முயற்சி செய்யும். அதற்காக அவை முன்னால் அடி எடுத்து வைக்கும்போது வண்டி இழுக்கப்பட்டு நகரும். ஆனால், மாடுகளுக்கு வைக்கோல் வாய்க்கு எட்டாது.

நமக்கு வெளியிலிருந்து வரும் உதவியின் தன்மை இப்படித்தான் இருக்கும். நாம் நமக்கு பாதுகாப்பு, பலம், ஞானம், மகிழ்ச்சி, எல்லாம் நமக்கு வெளியே இருந்து கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். ஒருபோதும் வெளியிலிருந்து உதவி கிடைக்காது.

நம்முடைய உடல் நம்முடைய கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நின்றால் நாம்தான் பலவான்கள் என்ற உணர்ச்சி ஏற்படுகிறது. என்னால் ஒன்றுமே முடியாது, இதற்கான திறமை என்னிடம் இல்லை, எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. இத்தகைய பேச்சுகளை உடைத்தெறிந்து வாழ்வோம். மலரும் தருவாயில் உள்ள அழகான அரும்புகள்தான் நாம். சின்ன விதைக்குள்தான் பெரிய மரம் என்னும் எல்லையற்ற சக்தி மறைந்து கிடக்கிறது.

உற்சாகமான வாழ்க்கை என்ற பயணத்தில் புதிய எல்லைகளைக் கண்டுபிடிக்க நம் சிறகுகளை விரிப்போம். அவ்வாறு செய்யும்போது எதிர்வரும் தடைகளையும், சவால்களையும், குறித்து மனம் தளர்ந்து விட வேண்டாம். அவை ஒரு காரணத்திற்காக இருக்கின்றன, வருகின்றன, தாக்குகின்றன. அவை நம்மை சாதாரண நிலையில் இருந்து அசாதாரண நிலைக்கு மாற்றிவிடும்.

கொந்தளிக்கும் கடல்தான் திறமையான மாலுமியை உருவாக்குகிறது. ஒரு கப்பல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிற்கலாம். ஆனால், அப்படி நிற்பதற்காக அந்தக் கப்பல் கட்டப்படவில்லை. நம் இலக்குகளை உயரமாக நிர்ணயிக்க வேண்டும். அதை நோக்கி நடைபோடுவதை மனக்கண்ணில் தினமும் பார்க்க வேண்டும். நம் இலக்குகளை அடையும் வரை தீவிர ஆசையை வளர்த்துகொள்ள வேண்டும்.

நாமே நம்மை காத்துக்கொள்வோம். நமக்கு உதவ, நமக்கு உந்துதல் அளிக்க வெளியே இருந்து யாரும் வரத் தேவையில்லை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT