motivation image Image credit - pixabay.com
Motivation

மனக்காயத்தை ஆற்றுங்கள் மகிழச்சி நிறையும்!

இந்திரா கோபாலன்

நீங்களா எங்கோ செல்லும் போது ஒருவர் கீழே விழுந்து விடுகிறார். உடனே அவரை நெருங்கி நம்மால் முடிந்த உதவி செய்வோம். உடலுக்கு வெளியே படும் காயத்தைப் பார்த்து  பதட்டம் அடையும் நீங்கள் உள்ளே மனதில் ஏற்படும் காயத்தைப் பற்றி யோசித்ததுண்டா?

மனக்காயத்தை உண்டாக்கியது எதுவோ  அதை அங்கிருந்து அகற்றுவது கிடையாது.  அதற்குப் பதிலாக அந்த எண்ணத்தை நினைத்து நினைத்து மேலும் காயத்தை ரணமாக்குகிறீர்கள் என்பதுதான் உண்மை. 

ஒருவருக்கு சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயம் வேறொருவருக்கு மிகப் பெரிய மனக்காயமாக தெரிகிறது. யாராவது செய்யும் சிறு சீண்டலோ அல்லது குத்தல் பேச்சோ உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். அது நெருப்பாக கனன்று கொண்டிருப்பதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதை உணர வேண்டும்.

பொதுவாக உறவினர்களின் புறக்கணிப்பு, தோல்விகள், அவமானங்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்துகின்றன. இவை எல்லாம் வீணான உணர்ச்சிவசப்படுதலால் ஏற்படும் விளைவுகளே என்பதை புரிந்து கொண்டால், நீங்கள் திடமாகவும்  தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். அவமானம் என்பதோ, தோல்வியோ  ஏமாற்றமோ அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

ஒரு முறை புத்தர்  தனது சீடர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவரை தகாத சொற்களால் திட்டினாள். ஆனால் புத்தரோ அமைதியாக அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தார். அவரது சீடர்கள் , அந்தப் பெண்மணி மோசமாக திட்டியும் அவர் அமைதியாக வருவது குறித்துக் கேட்டார்கள்.

உடனே அவர், "எந்தப் பொருளையும் கொடுப்பதற்கு  யாருக்கும் அனுமதி இருக்கிறது.  ஆனால் அதைப் பெற்றுக் கொள்வதும் மறுப்பதும்  நமது இஷ்டம்தான். அந்தப் பெண்மணி கொடுத்த பொருளை நான் வாங்கிக் கொள்ளவில்லை. அது அவரிடமே இருக்கிறது"  என்றார்.

ஆழ்மனம் எந்த ஒரு வார்த்தையையும்  காட்சியாகத்தான் பார்க்கும்.  அதை அறிந்ததால் புத்தர்  அந்தப் பெண்மணி பேசிய வார்த்தைகளை ஒரு பொருளாகப் பார்த்து பேச வேண்டாம் என்று கூற முடிந்தது. நீங்களும் இதை உணர்ந்து கொண்டால்  பிறரது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையும் பொருட்களாக உருவகப்படுத்தி, தேவையானதை எடுத்துக் கொண்டு, தேவையில்லாத தை அவர்களிடமே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு விடவும் உங்கள் ஆழ்மனதைப் பழக்கி விடுவீர்கள்.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை வெறுக்கிறீர்கள் என்பதை சிறு வரையறைக்குள் கொண்டு வந்து உங்கள் மனதில் ஏற்றிவிட்டால் போதும். உங்கள் மனம் விருப்பமானவற்றை‌ மட்டுமே மனதில் தேக்கி வைக்கும். விருப்பமில்லாதவற்றைத் தானே புறக்கணித்துவிடும். வெறுப்பானவற்றை மனதிலிருந்து அப்புறப் படுத்திவிட்டால்  அங்கே விருப்பமானவை நிறையும். அதனால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மகிழ்ச்சி மலரும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT