"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"!
எழுத்துக்களுக்கு முதன்மை 'அ'. இந்த உலகுக்கு முதன்மை இறைவன். அவனே கடவுள். அவனை இயேசு என்றும் கூறுங்கள். புத்தன் என்றும் புகழுங்கள் நபிகள் என்றும் நவிலுங்கள். முருகா என்றும் முழங்குங்கள். எப்பெயரில் அழைத்தாலும் அவன் ஒருவனே. நாம் சொல்லும் கருத்து.
'இறைவனை நம்புங்கள்' என்பதே! பக்திக்காக சொல்லவில்லை. ஆன்மீகச் சிந்தனை என்று வலியுறுத்தவில்லை. உலகில் வாழ்வில் நாம் நிறைய துயர் காண்கிறோம். எதிர்பார்த்த அனைத்தும் நடப்பதில்லை. எத்தனையோ பிரிவுகள்... சோகங்கள்.. .இழப்புகள்... கவலை... கண்ணீர்... நோய்... வறுமை... முதுமை. இறுதியில் இறப்பு. இதுதானே வாழ்வு.
இதற்கெல்லாம் ஆறுதல் கூறுபவர் இறைவன். 'எல்லாம் அவன் செயல்' என்கிறபோது துன்பம் தாங்கும் ஒரு துணிவு வரும் இக்கருத்தால்தான் நாம் இறைவனை நம்ப வேண்டும் என்கிறோம்.
"இறைவனை நேசிப்பவர்க்கு எல்லா காரியங்களும் சாதகமாகி நலமே அதிகரிக்கும்." புனிதர் பவுல் நற்கருத்து இது. நம்பிக்கையில் பிறந்த இதை நம் நெஞ்சில் விதைக்க வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை. இறைவன் நம்பிக்கையின் வடிவம். அவனை நீங்கள் அறிவால் சோதிக்க முடியாது .நல்ல நம்பிக்கை நல்லதே தரும். மனம்போல வாழ்வு என்பது இதனால்தான்.
இந்த நம்பிக்கை இறைவன் மீது மட்டுமல்ல. உங்கள் மீதும் ஏற்பட வேண்டும். உலகம் மீதும் ஏற்பட வேண்டும். வாழ்க்கை மீதும் ஏற்பட வேண்டும். தெய்வத்தால் ஆகாததும் முயற்சியில் கிட்டும்தான். அப்படி சொல்வதால் தெய்வ நிந்தனை ஆகாது. கடவுள் இல்லை என்று சொல்வதை விட, கடவுள் இருக்கிறார் என்பதில் கவலைகள் தீரக் கூடும். இது கருதியே பக்தியில் ஈடுபாடு மிகுந்த வாரியார் இப்படி சொல்கிறார்.
"தனக்கு யாரும் நிகரில்லாத சமானமில்லாத இறைவனின் திருவடியே நம்முடைய கவலையை மாற்றும்" -வாரியார்
இறைநெறி என்பதே அறநெறிதான். மனிதனை நல்வழிப்படுத்தவே மதமும் கடவுளும் படைக்கப்பட்டது. நாம் நல்வழி நடக்க, பாவத்திற்கு அஞ்சிட, தவறுக்கு விமோசனம் பெற, மனம் தீய வழியில் செல்லாது இருக்க, இறை நம்பிக்கை – பக்தி - மத ஈடுபாடு, கோவில் செல்லல் உதவும்.