நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் வாழ்கையில் முன்னேற துடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் நம்மில் பலருக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதற்க்கான காரணம் என்ன என்பதை பற்றி நாம் அறிந்துகொண்டால் நாமும் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க முடியும் என்பது உறுதி. வாழ்க்கையில் முன்னேறவில்லையே என்று நினைப் பவர்கள் முதலில் முன்னேறும் ஆசை தங்களுக்கு இருக்கிறதா என்று தங்களையே கேட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பலர் தற்போது செய்யும் வேலையே போதும் என்று நினைப்பவர்கள்தான்.
உலகை முன்னேற்ற நினைப்பவர் ஒவ்வொருவரும் முதலில் தன்னை எண்ணிப்பார்க்க வேண்டும். தங்களையே சரியாக எடை போட முடியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். உங்களுடைய நல்ல குணம், கெட்ட குணம் இரண்டையும் உண்மையாக உணர்ந்து சீர்தூக்கிப் பார்க்கும்போது உங்கள் செயல் திறன் பன்மடங்கு அதிகமாகிறது.
உங்கள் வாழ்க்கையே உங்களுக்கு வெறுத்துவிட்டது போலத் தோன்றுகிறதா? தவறு வேறு யாரிடமும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான். ஆமாம் நீங்கள் நீங்கள்தான் காரணம்.
ஒரு பெரிய பணக்காரனுக்கு பணத்தோடு, அதிகாரமும் இருந்தது. ஆனால் அவனுக்கு அனைத்தின் மீதும் இருந்த பற்று குறைந்து கொண்டே வந்தது.
அவனது மனம் தத்துவ சிந்தனைகளை நாடியது. அதனால் தனது சிந்தனையை வளர்க்க எங்கு படிப்பது, யாரிடம் படிப்பது என்று நிறைய பேரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அப்போது பலரும் ஒரு ஜென் துறவியைப் பற்றிச் சொன்னார்கள். அதனால் அவனும் அவரிடம் தனது அறிவை வளர்க்கச் சென்றான்.
அந்தத் துறவியின் காலில் விழுந்து,
"ஐயா! எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள் என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவியும்.,
"ஜென் தத்துவம் என்றால்..." என்று சொல்லி, உடனே அவனிடம் "நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா!" என்று கூறினார்.
அவனோ மனதில் "என்ன இவர் இப்படிச் சொல்கிறார், எனக்கு வந்தால் நான் போக மாட்டேனா? கொஞ்சம் கூட அறிவில்லாதவர் போல் சொல்கிறார்" என்று மனதில் புலம்பிக் கொண்டே, போய்விட்டு வந்தார்
அப்போது அந்தத் துறவி அவனிடம்.,
"புரிந்ததா...?" என்று கேட்டார். அதற்கு அவன், "இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.
அவர் அதற்கு "எவ்வளவு பெரிய பணக்காரனாக அல்லது அரசனாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவனிடமோ, இல்லை.. ஏழையிடமோ அல்லது எத்தகைய மனிதனாக இருந்தாலும், இப்போது நீ செய்த வேலையை அவருக்கு பதிலாக வேறு ஒருவர் செய்ய முடியாது. அவரவர்தான் செய்ய வேண்டும்
அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அதிலும் அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவன் வாயடைத்துப் போய்விட்டான்.
இந்த கதை நமக்கு சொல்ல வருவது, உங்கள் வேலையை அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல் நீங்களே செய்ய வேண்டும் என்பதே, அதற்கு நீஙகளே பொறுப்பானவர் என்பதே. மேலும், நமது பணியை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்ற கவலை நமக்கு வேண்டாம். நமக்கு விருப்பமான ஒரு செயலில், அல்லது துறையில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வது வெற்றிகரமான வாழ்க்கைகக்கு மிக முக்கியமானது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது அர்ப்பணிப்பு. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி பணியாற்றுவது என்பதும், அப்படிப் பணியாற்றும் நேரத்தில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதென்பதும் உங்களை மெருகேற்றும்.