அரிஸ்டாட்டில்... Image credit - medium.com
Motivation

அரிஸ்டாட்டில் எனும் நடமாடும் பல்கலைக்கழகம் பகிர்ந்த பொன்மொழிகள்!

கோவீ.ராஜேந்திரன்

த்துவஞானி என்று அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அரிஸ்டாட்டில். கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் குரு இவரே. இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக திகழ்ந்தார். இவர் தொடாத துறைகளே கிடையாது. இயந்திரவியல், வானிலையியல், தர்க்கவியல், தாவரவியல் விலங்கியல், பொருளியல், அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகளை பற்றியும் 400 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின் "விலங்குகளின் வரலாறு" என்ற நூலே இன்றைய விலங்கியல் துறையின் அரிச்சுவடி.

"அறிவு என்பது என்ன?  அதை எப்படிப் பெற்று நிலைத்திருக்க செய்வது, வளர்த்துக் கொள்வது என்று விளக்கும்போது. நமது அறிவுக்கு உண்மையான மூலாதாரம் அனுபவமே" என்கிறார் அரிஸ்டாட்டில்.

"அறிவின் முதிர்ச்சி கற்பித்தலின் மூலம் கிடைக்கலாம். ஆனால் வீரம், தன்னடக்கம், பெருந்தன்மை, நேர்மை போன்ற நற்குணங்கள் பழக்கத்தின் மூலமே உருவாகின்றன" என்கிறார் அரிஸ்டாட்டில்.

"குணங்கள் மூன்று வகையானது நல்ல குணம், தீய குணம், இந்த இரண்டையும் பிரித்து பார்ப்பதற்கு நடுத்தர குணம். இதில் நடுத்தரத்தினை நாம் கடைபிடித்தால் போதுமானது. கோழைத்தனம், ஆத்திரம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட வீரம், கஞ்சத்தனம், ஊதாரித்தனம் ஆகியவைகளுக்கு இடையில் தாராளம் ஆகிய நடுநிலையே சிறந்தது".

"தனி நபர் சொத்துரிமை அவசியமானதுதான். ஆனால் ஒரு அளவுக்கு மேல் சொத்து சேர்ப்பது ஒழுக்க கேடாகும்".

உங்களை நீங்களே அறிய, உங்களுடன் நீங்களே நேரத்தை செலவிட வேண்டும், தனியாக இருப்பதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும். அமைதி போரை விட மிகவும் கடினமானது.

யார் வேண்டுமானாலும் கோபப்படலாம் அது எளிதானது, ஆனால் சரியான நபருடன், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, சரியான முறையில் கோபப்படும் ஆற்றல் அனைவருக்கும் இல்லை மற்றும் அது எளிதானது அல்ல.

உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது. தைரியமே அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் தாய், ஏனெனில் அது இல்லாமல், நீங்கள் மற்றவற்றை தொடர்ந்து செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே.

இயற்கை ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது. வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை, அதேபோல வாழ்வின் உயர்வும் ஒரே நாளில் வந்துவிடாது.  உடலை குணப்படுத்துவதற்கு முன் நீங்கள் முதலில் மனதைக் குணப்படுத்த வேண்டும். கட்டளையிட விரும்புவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிந்திருப்பது மட்டுமே போதாது, அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும் கூட அறிந்திருக்க வேண்டும்.

தனது அச்சங்களை வென்றவரே உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பார். மகிழ்ச்சி என்பது நல்லொழுக்கத்திற்கான வெகுமதி. அதிகாலையில் எழுந்திருப்பது நல்லது, ஏனெனில் இதுபோன்ற பழக்கங்கள் ஆரோக்கியம், செல்வம் மற்றும் ஞானத்தை அடைய உதவுகின்றன.

அனைவருக்கும் நண்பராக இருப்பவர் யாருக்கும் நண்பரல்ல. தீய மனிதர்கள் பயத்தால் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் கீழ்ப்படிகிறார்கள். நம் நண்பர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதைப்போலவே நாம் நம் நண்பர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பினால், அதன் ஆரம்பத்தையும் அதன் வளர்ச்சியையும் கவனியுங்கள். நீண்டகால பழக்கத்தால் உள்வாங்கப்பட்டதை வாதத்தால் மாற்றி அமைப்பது சாத்தியமற்றது அல்லது எளிதானது அல்ல.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT