Image credit - pixabay
Motivation

உங்கள் மதிப்பை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள்!

சேலம் சுபா

வ்வுலகின் மிக அழகான மனிதராக நீங்கள் இருக்கலாம், உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் உங்களில் ஒரு ஒளியையும், வானவில்லையும் காண்பர். ஆனால் அதை நீங்களே உணராதபோது அவை வீணாகிவிடும். உங்கள் மதிப்பை நீங்களே சந்தேகிக்கும்போதும், உங்களை நீங்களே விமர்சிக்கும் ஒவ்வொரு கணமும், உங்கள் வாழ்க்கையின் வீணடிக்கப்பட்ட தருணங்கள், வீசியெறியப்பட்ட கணங்கள் ஆகிவிடும்."-- C. JoyBell C.

அந்த நடிகை ஒரே படத்தில் பெயர் வாங்கிவிட்டார். அது ஒரு புராதனமான படம் என்பதால் உலகம் எங்கும் கவனம் பெற்ற அந்த படத்தில் வாய் துடுக்குப் பெண்ணாக நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தவரின் வெற்றி அவ்வளவு எளிதாக இருந்ததா என்ன? இல்லை.

நடிகைகள் என்றாலே அழகுதான் முன்னணியில் இருக்கும். அழகான முகவெட்டும் நல்ல நிறமும் கொண்ட நடிகைகளையே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த நடிகை சற்று மாநிறம் என்பதால் ஆரம்பத்தில் இவரை ஏளனப்படுத்தி பரிகசித்தவர்கள் நிறைய பேர். மிஸ் இந்தியா அழகி போட்டியில் இவர் பங்கு பெற்று அதன் பின்னான பட வாய்ப்புகளை தேடும் நேரத்தில் பலராலும் இவர் நிறத்தை சுட்டிக் காட்டி புறக்கணிக்கப்பட்டவர்தான்.  

 ஆனாலும் அயராமல் இவர்  கிட்டத்தட்ட 100 ஆடிஷன்களுக்கு மேல் சென்ற பின்பே புகழ்பெற்ற ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னால் வரவேற்புடன் பல படங்களில் அவருக்கு வாய்ப்பை பெற்று தந்தது இவரது திறமை.

அவர் ஒரு பேட்டியில் கூறும்போது "என்னை புறக்கணிக்கத்தபோது வீட்டுக்குபோய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து வேதனைப்பட்ட நாட்கள் உள்ளன. நிதானமாக அதிலிருந்து வெளியே வந்தேன். அழகு என்பது அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே என்னை பார்த்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி யோசிப்பதை விட்டு விட்டேன். எனக்கு தன்னம்பிக்கை தந்த விஷயம் என் நண்பர்களால் பாராட்டப்பட்ட எனது குரல் வளம். அவர்கள் பேச்சு எனக்குள் உற்சாகத்தை நிரப்பியது.  தொடர்ந்து செய்த முயற்சியும் தன்னம்பிக்கையும் எனக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து  பாராட்டப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல. உலகமெங்கும் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சோபிதா துலிபாலாதான் அவர்.

இவர் எத்தனையோ முறை புறக்கணிக்கப்பட்டபோதும் தன் மதிப்பை இவர் குறைத்து நேரங்களை வீணாக்கவில்லை. விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இவர் முன்னேறி சென்றதால் மட்டுமே மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்பட்ட கதாபாத்திரத்தை பெற்று அனைவரையும் இவரால்  கவர முடிந்தது. இவர் ஒரு உதாரணம் மட்டுமே. இவரைபோல் எத்தனையோ பேர் தங்கள் மீதான விமர்சனத்தை கேட்டு நேரங்களை வீணடிக்காமல் தங்கள் தன்னம்பிக்கையால் அந்த நேரங்களை மதிப்பு மிக்கதாக மாற்றிக்கொண்டு வெற்றியை அடைந்துள்ளனர்.

நம் அழகையும் நம் மதிப்பையும் முதலில் நாம் உணர்ந்தால்  மட்டுமே நம்மால் வெற்றிக்கோட்டை எட்ட முடியும்.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

SCROLL FOR NEXT