ஒரு அறிஞர் சொன்னார், "நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்கு கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான். அது கெட்டுப் போவதற்கு முன் அதைப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பழம் அழுகிப்போய்விடும். பயன் தராது. இன்றைய தினத்தை நாளைக்கோ, நாளை மறுநாளோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நாளை மறுநாள் நீங்கள் செய்யும் வேலை நாளை மறுநாள் நீங்கள் செய்யக்கூடிய வேலைதானே தவிர, இன்றைக்கு செய்யக்கூடிய வேலை அல்ல.
இன்றைய தினமான தேதி மாதம் - வருடம் இனி மீண்டும் வராது. இன்று கிடைப்பினை இன்றே, உடனே மதிப்பிட்டு ஏற்கும் உறுதியும், மனப்பான்மையும் நமக்கு இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். வாழையின் இலை, மட்டை, தண்டு, பூ காய், கனி, சருகு அத்தனையும் மனிதன் பயன்படுத்திக் கொள்வதைப்போல், ஒரு நாளில் காலை, பகல் , மாலை, இரவு - ஒவ்வொரு பொழுது -அதன் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான் பெருமைக்குரிய மனிதர்களாக வாழ்கிறார்கள்.
வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர் தோல்வி அடைந்த மனிதர் என்று தனித்தனியாக ஒன்றும் கிடையாது. தோல்வியுற்ற சாதாரண மனிதர்கள் என்போர் யார்? கவனித்து பாருங்கள். தங்கள் வாழ்வின் பெரும்பகுதி நாட்களை வீணே கழிப்பவர்கள்தான். அவர்களுக்கென்று ஒரு லட்சியம் இல்லை. பிறருடன் வீண் பேச்சு பேசிக் கழிப்பவர்கள், குடித்து கழிப்பவர்கள், ஊர் சுற்றிக் கழிப்பவர்கள் என்று பலரகம் உண்டு என்றாலும் இவர்களின் 'செயல்' என்று ஒன்றும் இருக்காது.
வாழ்க்கையில் துயரமானவை சம்பவங்கள். இன்பமானவை சந்தர்ப்பங்கள். எனவே சந்தர்ப்பம் என்பது எல்லோருக்கும் எப்போதும் வராது. வரும்போது அதை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். நழுவ விடக்கூடாது. நழுவவிட்டால் அதே சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் அடுத்த மனிதன் அதை கொத்திக் கொண்டு போய் விடுவான்.
காக்கையை பாட்டு பாடச்சொல்லி அதன் வாயிலிருந்த வடையை நழுவி விழச்செய்து தூக்கிக் கொண்டு ஓடிவிட்ட நரியின் கதை எல்லோருக்கும் தெரியும்தானே. அதுபோல் நமக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்கிற வடையைதான் பறித்துக் கொணடு ஓட நம் பின்னே நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். இது போட்டி உலகம். தகுதியுள்ளவன் வெற்றியடைவான் என்கிற அமைதி உலகம் மாறி, 'வெற்றி அடைபவனே தகுதி உள்ளவன்' என்று சமூகத்தின் பார்வை மாறிப் போய்விட்ட அவசர உலகம்.
பெரும்பாலான வாய்ப்புகள் வாழ்வில் ஒருமுறைதான் வரும். அப்படி வரும்போது அதில் கூடவே சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து கொண்டு ஏற்க மறுத்து விட்டால் வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது. ஆகவே கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்.