வாழ்க்கையின் முழுப்பயனையும் பெற நம்முடைய மனம் அமைதியுடன் இருக்க வேண்டும். அமைதி, இன்பத்தின் திறவுகோலாக இருக்கிறது.
இதற்கு மாறாக அமைதி இன்றி மனம் தத்தளித்து வாழும் நிலையிலும், செய்யும் வேலையிலும் திருப்தி அடையாமல் இருப்பது வரவேற்கத்தக்கது அல்ல.
புகழின் உச்சியை அடைந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அமைதியில்லாமல் சஞ்சலப்பட்டிருந்தாலும் நாளடைவில் அமைதி பெறுவர். அமைதி ஏற்பட்டு புரட்சியைத் தோற்றுவித்து புது திருப்பத்தைக் கொடுத்து வானகமும் வையகமும் புகழும் அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கிறது என்பது வரலாறு காட்டும் உண்மை.
உள்ளம் ஒன்றின் மீது பற்றுதல் கொண்டிருக்கும்போது சந்தரப்பத்தின் காரணமாக வேறு ஒரு தொழிலில ஈடுபட நேர்ந்தால் மனதில் அமைதியின்மை ஏற்படும்.
எதிர்பார்த்த தொழில் அமையாதபடியினால் நிம்மதியின்மை தானாகத் தோன்றி விடுகிறது.
சக்தியும் கற்பனை வளமும் உடைய ஒருவர் தொழிலால் பஸ் ஓட்டுபவராக இருந்தால் மனம் அமைதியடையும். முடியும்?
அது மட்டுமல்ல, மனதின் விருப்பம் நியாயமான முறையில் செயலாற்றப்படாவிட்டால் வேலையில் கவனக் குறைவும், வாழ்க்கையில் பற்றுதல் இன்மையும், விரக்தியும் தோன்றும்.
அமைதியின்மைக்குச் சிறந்த பரிகாரம் மனம் விரும்பும் வேலையை நாம் எவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்வதுதான்.
நம்முடைய மனம் விரும்பும் ஒன்றை அது நமது நலனுக்கு உகந்ததாயின் ஏற்றுச் செயலாற்றுவதுதான் சிறப்பு அப்போது நம் மனமும் நம்மோடு சேர்ந்து இயங்க ஆரம்பித்து விடுவதால் அமைதியின்மைக்கே வழியில்லாமல் போய்விடும்.
இன்று நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே அதை ஒப்புக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.
பட்டம் பெற்றிருந்தால் இன்னும் செல்வாக்காக இருக்கலாமே என்று நினைப்பதோ, இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தால் கதாநாயகனாகத் திகழலாமே என்று நப்பாசை கொள்வதோ அல்லது நாம் தனவந்தனாக இருந்திருந்தால் நமது வாழ்க்கை எவ்வளவு உல்லாசம் நிறைந்ததாக இருக்கும் என்னும் மதுரமான கற்பனையில் மூழ்கித் திளைப்பதோ உண்மை நிலைக்கு ஒவ்வாததாகும். இது மனஅமைதியைக் குலைக்கவே செய்யும்.
நமக்கு இருக்கும் எந்த அதிகபட்சமான அனுகூலங்களும் அமைதியாய் இருப்பதற்கு உத்தரவாதம் அளித்துவிட முடியாது. ஏனெனில் அமைதியின் ஊற்று நம் இதயத்தில்தான் இருக்கிறதே தவிர வெளி உலகில் இல்லை.