வெற்றி என்ற மந்திரச்சொல் பலருக்கும் பிடித்தமானது. ஆனால் எல்லோருக்கும் வெற்றி கைகூடுகிறதா என்பது அவரவர் எடுக்கும் முயற்சிகளில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என்றால் அமைதியாக உழைக்க வேண்டும். அதன் பின் ஆர்ப்பாட்டமான வெற்றி தேடி வரும். அதைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.
அமைதியாக வேலை செய்வது என்றால் யாரிடமும் எதுவும் பேசாமல் மௌனமாக வேலை செய்வதல்ல. ஆர்ப்பரிக்கும் மனதை அடக்கி ஒருமுகப்படுத்தும் போது ஆற்றல் குவிகிறது. மனதில் ஆழ்ந்த அமைதி எழுகிறது. அப்போது மிக சிறப்பான சிந்தனைகள் தோன்றும்.
மனதில் இருக்கும் அமைதி கவன சிதறல்களை தடுக்கும். நீங்கள் ஒரு எழுத்தாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ தொழில் அதிபராகவோ தொழில் முனைவோராகவோ இருக்கலாம். ஆழ்ந்து அமைதியாக சிந்திக்கும் போது தொழிலில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிய தெளிவான சிந்தனை பிறக்கும் . ஒரு எழுத்தாளருக்கு அடுத்த கதை எழுதுவதற்கான கருவும் அது சார்ந்த விஷயங்களும் மனதிற்குள் கற்பனையாக ஊற்றெடுக்கும்.
உங்களுடைய முயற்சியில் தடைகளோ தோல்வியோ ஏற்பட்டால் வெளியில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வரக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக உங்களுக்கு நீங்களே ஊக்கமூட்டிக் கொண்டு செயல்பட வேண்டும். தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து வருவது எப்படி என்று அமைதியாக யோசித்தால் அதற்கான வழிகள் கிட்டும்.
தனியாக ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக சிந்திக்கும் போது உங்கள் ஆழ்மனதுடன் உங்களால் தொடர்பு கொள்ள முடியும். உங்கள் மனதில் உங்களைப் பற்றிய ஒரு கணிப்பு, நம்பிக்கை, லட்சியம் எல்லாம் இருக்கும். அது உங்களுடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்து உங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற ஊக்கத்தை தரும்.
அமைதியாக வேலை செய்வது ஒரு விதமான ஒழுக்கத்தையும் விடாமுயற்சியையும் தன்னை அறிதலையும் ஊக்குவிக்கும். சவால்களை எளிதாக சமாளிக்கும் தைரியத்தை அளிக்கும். புதுவிதமான சிக்கல்களை எதிர்கொள்ளும் துணிவைத் தரும். பிறருடைய உதவி இன்றி உங்களாலேயே எத்தகைய இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். அதனால் ஒரு மிகச்சிறந்த மனிதராக நீங்கள் உருவெடுப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய தொழிலிலும் வெற்றி பெறுவீர்கள்.
முயற்சிகளில் வெற்றி அடையும் போது பிறரிடம் இருந்து பாராட்டுக்களும் அங்கீகாரங்களும் கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் விட உங்களுடைய உள் மனது உங்களை பாராட்டும் பொழுது கிடைக்கும் சந்தோஷமே தனி தான். சின்ன சின்ன வெற்றிகளை கூட உள்ளூர அமைதியாக கொண்டாடிக் கொள்ளலாம். பிறர் உங்களை பாராட்டாமல் போனால் கூட நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.
அமைதியாக வேலை செய்வது என்பது யாருடனும் ஒட்டாமல் தனித்து நின்று வேலை செய்வது அல்ல. உங்களுடைய செயல்பாடுகளை அவ்வப்போது உடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் சொல்லும் கருத்துக்களை, அவை ஏற்புடையதாக இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.