-Wayne Dye... 
Motivation

வெற்றியோ தோல்வியோ தேர்ந்தெடுப்பது நீங்கள்தான்!

சேலம் சுபா

உங்களுக்கு நடப்பது எதுவாயினும், அது வளர்வதற்கான வாய்ப்பு அல்லது உங்கள் வளர்ச்சிக்கான தடைக்கல். தேர்ந்தெடுக்கப் போவது நீங்கள்தான். -Wayne Dyer.

வேயின் வால்ட்டர் டையர் ஓர் அமெரிக்க தத்துவவியலாளர், சுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியர், சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்.  இவர் எழுதிய “நீங்கள் தவறிழைக்கும் பகுதி” (your erroneous zone) என்னும் இவருடைய முதல் நூல் 35 மில்லியன் படிகள் விற்று விற்பனையில் எப்பொழுதுமில்லாத சாதனை புரிந்துள்ளது.

நீங்கள் தவறிழைக்கும் பகுதி’’ என்னும் நூலைத் தொடர்ந்து பல நூல்களை எழுதி வெளியிட்டார். “’கனவுகள் நனவாயின” (Wishes fulfilled), “சாக்குகளுக்கு இடமில்லை” (Excuses bygone), “வானமே எல்லை” (Sky is the limit) போன்றவை பெரும் வெற்றியைப் பெற்றது இவரது சிறப்பு. 1990 களில், அவரது  எழுத்துப்பணியின் கவனம் ஆன்மீகத்திற்கு மாறியதும் புகழ்பெற்ற ஓப்ராவின் ஃப்ரே ஷோவில் அடிக்கடி விருந்தினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண நிலையிலிருந்து தனது எழுத்து எண்ணங்கள் மூலம் பலர் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தந்து தானும் மதிப்புமிக்கவராக மாறிய இவர் அனுபவித்து சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்.

அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் விவசாயம்தான் வாழ்வாதாரம். அங்கிருந்த முருகன் தன் மகன் ஆனந்தனும் தன்னைப் போலவே விவசாயத்துக்கு வந்து கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி தன் சக்திக்கு மீறி அவனை  கல்லூரியில் படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்து ஆனந்தன் அந்த ஊருக்கு வருகிறான்.

தன் தந்தை படும் சிரமங்களை பார்க்கிறான். வயலில் களை எடுப்பதில் இருந்து உரம் தெளிப்பது வரை ஆட்கள் யாரும் இன்றி தந்தை ஒருவரே விவசாயத்தில் ஈடுபட்டு அதிலும் சரியான வருமானம் கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கிறான். ஆனந்தனுக்கு அவன் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைக்கு அனுமதிக் கடிதம்  வருகிறது. தந்தை முருகனுக்கு பெரும் மகிழ்ச்சி. தான் படிக்க வைத்ததற்கு சரியான பலன் கிடைத்துவிட்டது என்று மகிழ்கிறார்.

ஆனந்தன் ஊருக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. ஆனால் ஆனந்தன் கலப்பை எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு செல்கிறான். முருகன் பதறிப் போகிறார். "என்ன ஆனந்தன் என்னப்பா இப்படி பண்ற இவ்வளவு நல்ல வேலையை விட்டுட்டு நீ வயல்ல சேத்துல இறங்கி கஷ்டப்படணுமா?"

ஆனந்தன் சொல்கிறான். "அப்பா நீங்கள் என்னை படிக்க வைத்தது நான் ஒருவன் மட்டும் வாழ அல்ல. இதோ நம்மைப் போன்ற விவசாயிகள் ஏற்படும் சிரமத்தை பார்க்கிறேன். இவர்களுக்காக நான் ஏதேனும் செய்தாக வேண்டும் நிச்சயம் செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனி என் வழி இந்த விவசாயம்தான். தயவு செய்து என்னை மன்னியுங்கள்" என்று சொல்லிவிட்டு வேலைக்கான அனுமதி கடிதத்தை தூக்கிப்  போடுகிறார்.

நான்கு வருடங்கள் கழித்து அனைத்து செய்தித் தாள்களிலும் ஆனந்தனின் புகைப்படம். ஆம். ஆனந்தன் விவசாயத்துக்கு ஏற்ற ஒரு புதுமையான உழவு இயந்திரத்தை கண்டுபிடித்த தகவல் அந்த செய்தித் தாள்களில் இடம் பெற்றிருந்தது.

இந்த இடத்தில் ஆனந்தன் தனக்கான வாய்ப்பாக விவசாயத்தை எடுத்துக் கொண்டான். ஆனால் அதே விவசாயம் பலருக்கும் பொய்த்துப்போக ஆனந்தனுக்கோ அது புதுமையான சிந்தனைகளால் வெற்றி தரும் வழியாயிற்று.

தன் முன் இருக்கும் சூழலை வெற்றிகரமானதாகவோ அல்லது வேறு விதமாகவோ மாற்றிக் கொள்வது நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகளில் மட்டுமே உள்ளது. இதைப் புரிந்து நடந்தால் வெற்றி நிச்சயம்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT