தூண்டிலோடு கரையில் நிற்பவன் கண்ணில் 100 மீன்கள் தென்படும். தூண்டிலை இப்படியும் அப்படியும் நகர்த்திக் கொண்டேயிருந்தால் ஒன்று கூட சிக்காது. எதிலும் நிலைத்திருக்காமல் இதுவா, அதுவா என்று இடம் மாறித் தேடினால் எதிலும் திருப்தி இருக்காது ஒருவருக்கு கிரிக்கெட் விளையாட்டு என்பது விளையாடுபவருக்கோ அது வாழ்க்கை. உங்கள் தொழிலோ பணியோ எது என்பதில் தெளிவு வேண்டும். மாடு மாதிரி உழைத்தேன். பலனில்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை. எவ்வளவு நேரம் உழைக்கிறோம் என்பதை விட எவ்வளவு திறமையாக உழைத்தீர்கள் என்பதுதான் வெற்றியை நிர்ணயிக்கிறது.
உங்களை நீங்களே அதிர்ஷ்டம் இல்லாதவராக நினைக்கக் கூடாது. ஒருமுறை அரசன் வேட்டையாடப் போனான். அவன் கிளம்பும் முன் ஒரு நாவிதன் எதிர்ப்பட்டன். அரசன் எவ்வளவோ அலைந்து திரிந்தும் எந்த மிருகமும் சிக்கவில்லை. உடனே அரசன்" அந்த நாவினை இழுத்துத் தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததால்தான் எனக்கு துரதிஷ்டமாகி விட்டது" என்றான். அரசன் ஆணைப்படி நாவிதனை கதறக் கதற அரண்மனைக்கு இழுத்து வந்தனர். தெனாலிராமன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அரசவைக்கு வந்தான். நாவிதனை தூக்கில் போடும் முன் அரசரிடம் "அரசே, எனக்குத் தெரிந்து இன்னொரு முகமும் துரதிஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா" என்று கேட்டான். நிச்சயமாக என்றார் மன்னன். அது சரி யார் அந்த இன்னொருவர் என்று அரசன் கேட்க உடனே தெனாலிராமன்" நீங்கள்தான் மன்னா" என்றார்
என்ன திமிர் உனக்கு என்று சீறினான் அரசன். அதற்கு தெனாலிராமன் "பொய் இல்லை மன்னா. நீங்கள் நாவிதர் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இலலை. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப் போகிறது. எந்த முகம் துரதிஷ்டமானது, நீங்களே சொல்லுங்கள்' என்றான்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா. மேலே இருந்து உங்களை விட சக்தி வாய்ந்த ஒருவர்தான்
உங்களை இயக்குவதாக நினைப்பது முட்டாள்தனம். உங்களுக்கு நேர்வது எல்லாம் உங்களால் வரவழைக்கப் பட்டதுதான். அதை நீங்கள் உணர்வதில்லை. உண்மையில் எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எதுவோ, படைத்தலுக்கே மூல சக்தி எதுவோ அதுவே உங்களிடம் இருக்கிறது. விழிப்புணர்வை விட சக்தி வாய்ந்த எதுவும் இங்கே இல்லை. உங்கள் திறமை எது என்று புரிந்து கொள்ளாமல் அதை பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையின் துக்கமாகும்.
இது உயர்ந்தது. இது தாழ்ந்தது என்று மனதில் எதையும் நிர்ணயித்துக் கொள்ளாதீர்கள். எந்த தொழில் செய்ய விருப்பமிருந்தாலும் அதன் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் அறிந்து கொள்ளுங்கள். முழு திறமையையும் பயன்படுத்தாமல் செலவு செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட நிமிடம். இதை கவனத்தில் கொள்ளுங்கள். 100 சதவீதம் திறமையைப் பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.