motivation article Image credit - pixabay
Motivation

தொலைபேசியில் பேசும்போது கவனிக்க வேண்டியது!

ம.வசந்தி

தொலைபேசியின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க தொலைபேசியில் எப்படி பேசினால் சிறந்த பலனை பெறமுடியும் என்பது குறித்தும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. தொலைபேசியில் விளையாட்டாக தவறுதலாக பேசி விபரீத விளைவுகளை சந்தித்தவர்கள் அநேகம் பேர் உண்டு. நேரடியாகப் பேசுவதற்கும், தொலைபேசி மூலம் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தொலைபேசியில் பேசும்போது சிறப்பாக பேச சில நடைமுறைகள் உதவும்.

* தொலைபேசியில் முக்கியமானவர்களிடம் பேசுகிறோம் என்றால் அவர்கள் பேசுவதை குறிப்பெடுத்துக்கொள்ள காகிதம்,  பேனா ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

* பேச்சை துவங்கும்போதே பேசும் நபர் முக்கியமானவர் என்றால் பேச்சில் ஈடுபாட்டை காட்டி வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேசவேண்டும். 

* தொலைபேசியில் பேசும்போது உங்கள் குரல் தொனி குறித்து கவனமுடன் இருக்கவேண்டும். அதிக சத்தத்துடன் பேசுவதும், மிகக் குறைந்த சத்தத்துடன் பேசுவதும் விரும்பத் தகுந்தவை அல்ல. நீங்கள் உரையாடலை விரும்புகிறீர்களா, இல்லையா என்பதை உங்கள் குரல் காண்பித்துவிடும்.

* தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது உணவு உண்பது,  தேநீர் பருகுவது, பத்திரிக்கை படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பிற வேலைகளை தவிர்த்து விடுங்கள்.

* பொதுவாக தொலைபேசி உரையாடல்கள் குறுகிய நேரத்தில் முடிந்துவிடும். எனவே என்ன பேசவேண்டும் என சிந்தித்து இணைப்பு எண்களை அழுத்துங்கள். ஏதோ பேச நினைத்தேன்; மறந்து விட்டேன் என கூறுவது நல்ல உரையாடலாக மாறாது. 

* தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் இணைப்பை துண்டிப்பதற்கு முன் வேறு ஒருவருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

* கேட்கின்றவர் புரிந்து கொள்ளும் மொழியில் தேகத்தில் சப்தத்தில் தெளிவாக பேசவேண்டும். 

* வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தொலைபேசியில் பேசக்கூடாது. அழைப்பது எமனாக இருக்கலாம். அவசியம் ஏற்பட்டால் வாகனத்தை நிறுத்திவிட்டு பேச்சை துவங்குங்கள்.

* தொலைபேசியில் உரையாடும்போது அழைத்தவர் கூறும் கருத்துக்களை ஆமோதிப்பது பதில் கூறுவது கேள்வி கேட்டது அனுதாபம் தெரிவிப்பது இவை யாவும் அவர்கள் உங்கள் மீது கொள்ளும் நம்பிக்கையையும், நல்ல எண்ணத்தையும் அதிகரிக்கும். பேச்சு முடியும் வரை உங்கள் கவனம் உரையாடலை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

* தொலைபேசியில் பேச துவங்கும்போது, 'வணக்கம்' 'நலமாக இருக்கின்றீர்களா' போன்ற வாழ்த்துகளுடன் துவங்குங்கள்.

* தொலைபேசி உரையாடலின்போது சொற்களை பேசுவதில் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ, அதைவிட அதிக அக்கறை தொடர்பில் இருப்பவர் பேசுவதை கேட்பதில் காட்ட வேண்டும். 

தொலைபேசியில் பேசும்போது யாருடன் பேசுகிறீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள். தவறுதலாக தொடர்பு எண்களை மாற்றி அழைத்து தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். உறவினருடன், நண்பர்களுடன், சகப்பணியாளர்களுடன், முக்கிய மானவர்களுடன் எல்லாம் எப்படி பேசுவது என்பதில் தெளிவாக இருங்கள். தொலைபேசி உரையாடல் உறவை வளர்க்கவும் செய்யும்; உறவினை கெடுக்கவும் செய்யும்; எனவே தொலைபேசி உரையாடலுக்கு தேவையான நற்பண்புகளை வளர்த்திடுங்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT