“கோபம் உள்ளே நுழைகிறபோது அறிவு வெளியே போய்விடுகிறது”. இது ஒரு புகழ் பெற்ற இத்தாலியப் பழமொழி. கோபத்தினால் நமக்கு விளைவது நன்மையா தீமையா? வாருங்கள் கொஞ்சம் இந்த பதிவில் அலசிப் பார்ப்போம்.
நமது பல இயல்புகளில் கோபமும் ஒன்று. இன்றைய சூழலில் கோபப்படாமல் நம்மால் வாழவே முடியாது. ஆனால் அதற்காக எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவார்கள். சிலர் அநீதியே நடந்தாலும் நமக்கென்ன என்று அமைதியாக இருந்து விடுவார்கள். இரண்டுமே தவறுதான்.
நமக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறது என்பதைப் பார்ப்போம். சிலருக்கு தான் நினைத்தது உடனே நடந்தாக வேண்டும். இல்லையென்றால் கோபம் வரும். வேறு சிலருக்கோ தான் சொன்னதை தமக்குக் கீழே பணிபுரிபவர்கள் உடனடியாக செய்யாவிட்டால் கோபம் வரும். சிலருக்குத் தங்களுக்குப் பிரியமானவர்களைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால் கோபம் வரும். சிலர் தங்கள் குறைகளை பிறர் எடுத்துச் சொன்னால் கோபம் வரும். சிலருக்கோ அவர்களுடைய கருத்தை பிறர் மறுத்துப் பேசினால் கோபம் வரும்.
தம்மைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொண்டு தான்தான் இந்த உலகத்திலேயே பெரிய ஆள் என்று கற்பனை செய்து வாழ்பவர்களுக்கே கோபம் அடிக்கடி வரும் என்பது உளவியல் ரீதியான உண்மை. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை உள்ளவர்களுக்கும் அதிக அளவில் கோபம் வரும். சிலருக்கு உடல்நிலை காரணமாக கோபம் வருவதுண்டு. நம்மைச் சுற்றி உள்ளர்கள் நன்றாக இருக்கிறார்களே. நமது உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்ற எண்ணமே கோபமாக மாறுகிறது.
எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்களை இந்த சமூகம் வெறுக்கும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகையவர்களின் கோபத்திற்கு மதிப்பு இருக்காது. அவர் எதுக்கெடுத்தாலும் கோபப்படுவார் என்று சொல்லிவிட்டு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து விடுவார்கள்.
நேர்மையானவர்களின் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும். நேர்மையானவர்கள் அநீதிகளைக் கண்டு உடனடியாகக் கோபப்படுவார்கள். ஏழைகளுக்கு அநீதி இழைப்பவர்களைக் கண்டு கோபப்படுவார்கள். அநியாயமாக சிலர் துன்புறுத்தப்படும் போது அதைக் கண்டு கோபப்படுவார்கள். இதற்கு “அறச்சீற்றம்” என்ற பெயரும் உண்டு. நேர்மையானவர்களின் கோபத்திற்கு அசாத்திய வலிமை உண்டு. இதைத்தான் “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பார்கள்.
நாம் கோபப்படும்போது நமது இதயத்துடிப்பானது அளவிற்கு அதிகமாக அதிகரிக்கும். இயல்பான சுவாசமானது வேகமான சுவாசமாக மாறும். பற்களைக் கடித்தல், நகங்களைக் கடித்தல் முதலானவை நிகழும். இத்தகைய செயல்கள் உங்கள் உடல்நலத்தை நிச்சயம் பாதிக்கும்.
கோபம் ஏற்படும் வேளைகளில் உடனடியாக கண்களை மூடிக்கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதிற்குள் எண்ணுங்கள். கோபம் மெல்ல மெல்ல குறையும். அப்படியும் குறையவில்லை என்றால் மறுபடியும் நூறிலிருந்து தொடங்கி ஒன்று வரை எண்ணி முடியுங்கள்.
கோபம் ஏற்படும்போது அமைதியாக உட்கார்ந்து சிந்திக்கப் பழகுங்கள். கோபத்திற்கான காரணம் என்ன என்று சிந்தித்தால் அதற்கான மூல காரணம் நீங்களாகவும் இருக்கக்கூடும் என்பதை உங்களால் உணர முடியும். உங்கள் கோபத்திற்கான காரணம் வேறு யாராவது இருந்தால் ஈகோ பார்க்காமல் அவர்களிடம் பொறுமையாகப் பேசுங்கள். பிரச்னைகள் சுலபமாக தீரக் கூடும்.
கோப்படுவதால் சிறிய பிரச்னைகள் கூட பெரிய பிரச்னையாக மாறக்கூடும். உங்கள் உடல் நலம் பாதிப்படையும். உறவுகளையும் நட்புகளையும் இழக்க நேரிடும். எல்லோரும் உங்களை எதிரியாகப் பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.
கோபத்தினால் உங்களுக்கு எல்லாவிதத்திலும் இழப்புதானே தவிர நன்மை ஏதும் விளையப் போவதில்லை. எனவே நண்பர்களே!. ஒன்றுக்கும் உதவாத கோபத்தைத் தூக்கி எறியுங்கள்.