- மரிய சாரா
நொடிகள், நிமிடங்கள், மணி நேரங்கள் என நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகின்றன. ஒரு நொடியில், ஒரு நிமிடத்தில் என வாய்ப்புகளை இழந்தவர் உண்டு, வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றவர்களும் உண்டு. ஒரு நிமிடத்தில் வாழ்க்கை மாறிப்போனவர்கள் உண்டு. ஒரு நிமிடத்தில் உறவுகளை இழந்தவர்களும் உண்டு.
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது. நாளை, பிறகு என்பதெல்லாம் நேர விரையம் மட்டுமே. நன்றே செய், அதை இன்றே செய், இன்றும் இப்போதே செய் என்பதுதான் வெற்றியை அடைவதற்கான முதல்படி. எந்தச் செயலையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போட தோன்றும்போதெல்லாம் ஒன்றை நினைவில்கொள்ளுங்கள்.
ஒரு வேளை நாளை என்பதே நமக்கு இல்லாமை போனால் என்ன செய்வது?
நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு ஒரு முறைதான். இந்த உலகில் கடந்த நிமிடம் உயிருடன் எத்தனையோ பேர் இப்போது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், நாம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறோம். ஒவ்வொரு நொடியையும் அதன் மகத்துவத்தையும், அதன் விலைமதிப்பற்ற தன்மையையும் உணர்ந்தவர்களாக செலவிட வேண்டும்.
இந்தப் பூவுலகில் அனைத்திற்கும் மாற்று வழியை மனிதன் கண்டுபிடிக்கலாம். அந்த அடிப்படையில் இதுவரை எவ்வளவோ கண்டுபிடித்துவிட்டான் மனிதன். ஆனால், அவனால் கடந்துபோன நிமிடங்களை திரும்ப கொண்டுவர இன்று வரை இயலவில்லை. இனி அவனால் செய்யவும் முடியாது.
ஏனென்றால் நேரம் என்பவன் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்கமாட்டான். நொடிகளில் துவங்கி மில்லியன் ஆண்டுகள் என அவன் கடந்து சென்றுகொண்டேதான் இருப்பான். நம்மையும் கடத்திக்கொண்டு சென்றுவிடுவான்.
காலம் கடந்தும் காவியங்களில் இடம்பிடித்தவர்கள் எல்லோருமே காலத்தையும், நேரத்தையும் பொன் போல் காத்து, அதன் அருமை தெரிந்து, வீணாக்காமல், உழைத்து சாதித்தவர்கள்தான். நாளை என்பதை பற்றி சிந்திக்காதவர்கள்தான் சிகரங்களை எட்டியுள்ளனர்.
முடியாது, வாய்ப்பில்லை, நாளை பார்த்துக்கொள்ளலாம், பிறகு செய்யலாம், இன்னும் நேரம் இருக்கிறது என்பன போன்ற சிந்தனைகள் எல்லாம் சோம்பித் திரிபவர்களின் இயலாமையில் வெளிப்படும் வார்த்தைகள்தான். என்னால் முடியும், நான் செய்வேன், நேரத்தை விரையம் செய்யமாட்டேன். இப்படி சிந்திப்பவர்கள்தான் சாதனையாளர்கள் ஆகின்றனர்.
கடந்துபோன நிமிடங்கள் போகட்டும். இனியும் உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளதால்தான் இன்னும் நீங்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இனி வரும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்பதை மனதில்கொண்டு, உழைக்க துவங்குங்கள்.
எல்லோருக்கும் ஒரு நேரம் வரும் என்பார்கள் உண்மைதான். ஆனால், அந்த நேரம் எப்போது என யாருக்கும் தெரியாது. யாரும் எதிர்பாராத நேரத்தில் வரும் கள்வனைப்போலதான் உங்களுக்கான நேரம் வரும். ஆனால், அதுவரை சோம்பித்திருந்தால் சரியான நேரம் வந்தும், அது உங்களுக்குத் தெரியாமலே உங்களைக் கடந்து சென்றுவிடும்.
அடுத்த நொடி கூட எனக்கான அந்த நேரம் தான் என உழைக்க, நேரமும் உங்களை வாரி அணைக்க தேடி வந்துவிடும். ஆனால் அப்படி உங்களை
தேடி வரும்போது நீங்கள் வரவேற்க தயாராக இருக்கவேண்டியது மிக முக்கியம்.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் அவரவர் முயற்சிகளில் மாற்றி அமைக்கமுடியும். விடா முயற்சிக்கு அந்தச் சக்தி உண்டு. எனவே, நேரம் எனும் நில்லாப் பயணியுடன் சேர்ந்து பயணித்து வெற்றியின் இலக்கை அடைவோம். வாழ்த்துகள் .