angry moments... Image credit- pixabay
Motivation

வெற்றிக்கு முட்டுக்கட்டை ஆகும் அதிக கோபம்!

சேலம் சுபா

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

அருமையான வாழ்வியல் கருத்துடன் வெற்றிக்கான முன் எச்சரிக்கை தருகிறது வள்ளுவரின் இந்த வரிகள்.

அந்தக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையில் தன்னம்பிக்கை பேச்சாளர் கோபம் எத்தனை பின்னடைவைத் தரும் என்பதைப்பற்றி பேசினார். பேசி முடித்து மாணவர்களைப் பார்த்து "ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்று சொன்னார்.

ஒரு மாணவன் எழுந்தான். அவன் கைகளில் இருந்த நோட்டைத் தூக்கி அவர் மீது எறிந்தான். அனைவரும் திடுக்கிட்டுப்போக அந்தப் பேச்சாளர் நிதானமாக "தம்பி சொல் என்ன பிரச்னை உனக்கு?" என்று கேட்டார்.

"ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அதிக கோபம் ஆபத்தானது என்று அறிந்திருந்தாலும் சில சமயங்களில் அதை அடக்க முடியாமல் தோற்றுப் போகிறோம். இதோ இப்போது கூட சினிமாவுக்கு செல்லும் ஆசையில் இருக்கும் நான் உங்கள் பேச்சைக் கேட்டு நேரமாகிவிட்டதே என்ற கோபத்தை அடக்க முடியாமல்தான் இது போன்ற செயலில் இறங்கினேன். மன்னியுங்கள். என்னை மீறி வரும் வரும் கோபத்தை என்ன செய்வது?"

"கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய். பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்.. கோபம் கொள்ளாதே உன்னையே நீ இழப்பாய்.. இதோ கோபத்தால் தன்னிலை மறந்து உன்னையே நீ இழந்து விட்டாயே தம்பி. ஆனால் மாணவர்களே உண்மையில் இந்த மாணவர் பாராட்டுக் குரியவர். தன் பலவீனத்தை வெளிப்படையாக காட்டி அதிலிருந்து மீளும் வழியைக் கேட்கிறார். நிச்சயம் இந்த மாணவர் வெற்றியாளர் வரிசையில் சேர்வார்" என்று பாராட்டியவர் அந்த மாணவருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கோபத்தை அடக்குவது எப்படி என்று ஆலோசனைகளைத் தந்தார்.

நம் இலக்கு நோக்கிய பாதையில் பல தடைகளைத் தாண்டி செல்லவேண்டும். அதில் முக்கியமான தடைதான் கோபம். தேவையான சூழலில் கோபம் காட்டுவது இயல்பானது. ஆனால் அந்தக் கோபம் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கட்டுப்பாடற்ற கோபம் பிரேக் இல்லாத வண்டிபோல வேகமாக சென்று விபத்தை சந்திக்கும்.

கோபம் வெற்றிக்கு முட்டுக்கட்டை ஆகுமா? நிச்சயமாக. கோபம் நமது உடலில் ஏற்படுத்தும் தீமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். கோபத்தினால் எகிறும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு முதலிய இதய நோய்களுக்கு வழிவகுக்கும். அதிகக் கோபத்தால் உடல் நடுக்கம் மற்றும் வயிற்றில் அமிலச்சுரப்பினால் அல்சர் கூட ஏற்படும். சுவாசம் சீர்கெட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

மேலும் மனம் தடுமாறும்; நம் கட்டுப்பாட்டை இழந்து, வார்த்தைகள் நாமே எதிர்பாராத வண்ணம் வந்து விழும். சொற்கள் மட்டும் அல்ல, செயலும் கூட நமது கட்டுப்பாட்டில் இராது. இப்படி கோபமானது "நமது" உடலிற்கும், மனதிற்கும் மட்டும் தீமையைச் செய்வதில்லை கோபம். கோபத்தை யாரிடம் வெளிப்படுத்துகிறோமோ, அவர்களுடனான உறவில் விரிசல் தருகிறது.

இத்தனை தீமைகள் தரும் கோபம் கூடவே தோல்வி எனும் மிகப்பெரிய தோல்வியையும் சேர்த்தே பரிசாகத் தரும்.

ஆகவே கோபத்தைக் குறைத்து, நாம் சாதிக்க நினைப்பதை, அமைதியான, நட்பான அணுகுமுறையினால் சாதித்து வெற்றி பரிசைப் பெறுவோம்.

கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தரும்!

கேரளாவின் மிஸ் பண்ணக் கூடாத சுவையான 10 சைவ உணவுகள்!

வயதானாலும் இளமையுடன் இருக்க இயற்கை வழிமுறைகள் இதோ..!

இந்தப் பதவிக்கு அவர் சரிபட்டு வரமாட்டார் - கம்பீர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர்!

குளிர் காலத்தில் கை, கால் வறட்சியை நீக்க இயற்கையான 7 வழிகள்!

SCROLL FOR NEXT