‘சேமிப்பு’ என்பது வாழ்க்கையில் நாம் எல்லோரும் கட்டாயம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல பழக்கமாகும். சிறுசேமிப்பின் மூலமாக நாம் ஆசைப்பட்ட பெரிய விஷயங்களைக்கூட சுலபமாக அடைய முடியும். சேமிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது அவசியமாகும். இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள இந்த கதையைப் படியுங்கள்.
ஒரு ஊரில் ராமு மற்றும் சோமு ஆகிய இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவருமே ஒரே ஆபிஸில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் ராமுவுக்கு சின்ன வயதிலிருந்தே விலையுயர்ந்த போன் வாங்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அதற்கான செயல் அவரிடம் சுத்தமாகவேயில்லை. அவருடைய சம்பளத்தில் சேமிப்பு என்பதே இல்லாமல் வெளியிலே சென்று சாப்பிடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று செலவழித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவருடன் வேலை பார்க்கும் சோமு, ‘நான் ஒரு புது போன் வாங்கியிருக்கிறேன். நல்லாயிருக்கான்னு பார்த்து சொல்' என்று கூறி இவரிடம் அதைக் காட்டுகிறார். அந்த புதுபோனை பார்த்ததும் ராமுவிற்கு ஆச்சர்யம். ‘நீ என்னைவிட சற்று குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறாய். அப்படியிருக்கையில், எப்படி உன்னால் இவ்வளவு விலை அதிகமான போனை வாங்க முடிந்தது’ என்று குழப்பத்துடன் கேட்டார்.
அதற்கு சோமு என்ன சொன்னார் தெரியுமா? நான் என்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு சின்ன பங்கை தொடர்ந்து சேமிக்க ஆரமித்தேன். ஆரம்பத்தில் அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், போகப் போக அது எனக்கு பெரிதாகவே தெரியவில்லை. எனது சேமிப்பு பணம் தேவைக்கு அதிகமாகவே இருந்ததால், உடனேயே நான் ஆசைப்பட்ட இந்த போனை வாங்கிவிட்டேன் என்று கூறினார். இப்போதுதான் சேமிப்பின் மகத்துவம் என்ன என்பதை ராமுவால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
நீங்களும் இதைப்போல உங்கள் சேமிப்பை உடனேயே தொடங்குங்கள். அப்போதுதான் நீங்கள் ஆசைப்பட்ட பொருளை யாரையும் எதிர்ப்பார்க்காமல் உங்களாலேயே சொந்தமாக வாங்க முடியும். சின்ன சேமிப்புதான் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.