மனித வாழ்வில் ஏதேனும் ஒன்றை அடைந்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் மன நிம்மதியைத் தொலைத்து அலைபவர்கள் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட மக்கள் எப்படி மன அமைதி பெற வேண்டும் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.
ஒரு நாட்டினை மன்னர் ஒருவர் ஆட்சி செய்கின்றார். அவர் மன நிம்மதி வேண்டி மாலை வேலைகளில் உலா வருவது வழக்கம். அப்படி ஒரு முறை உலா வந்து கொண்டிருக்கும் போது ஒரு வீட்டின் அருகில் ஒருவன் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் அமர்ந்திருந்தான். அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியும் மன நிம்மதி அவனை முழுமையாக ஆட்கொண்டது என்பது. இதைப் பார்த்த மன்னருக்கு ஒரே ஆச்சரியம் ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னன் நான், என்னிடம் இல்லாத பொருட்கள், செல்வம் என்று எதுவுமில்லை, நான் நினைத்ததை நினைத்த கணத்தில் அடைய முடியும். ஆனால் என்னிடம் நிம்மதி என்ற ஒன்று இல்லை. இவனோ ஒரு ஏழை இவன் எப்படி நிம்மதியாக வாழ்கின்றார் என்று தனக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கு பதிலை அமைச்சரிடம் கேட்போம் என்று அங்கிருந்து சென்று விட்டார்.
அரண்மனைக்குச் சென்று அமைச்சரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார். அமைச்சரும் அப்படியா சரி சென்று அவரைப் பார்ப்போம் என்று அங்கிருந்து கிளம்பினார். அமைச்சர் அவரைக் காண செல்லும் பொழுது வெறும் கையோடு செல்லவில்லை கையில் கொஞ்சம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு சென்றார். அதை அந்த ஏழைக்கு தெரியாமல் அவர் அருகில் வைத்து விட்டு அமைச்சரும் மன்னரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. இரு நாட்கள் கழித்து மீண்டும் அந்த ஏழையைக் காண இருவரும் வந்தனர். அப்போது குதிரையின் காலடி சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தான் அந்த மனிதன். அவன் முகத்தில் இப்பொழுது நிம்மதி தெரியவில்லை பதிலாகப் பயமும் குழப்பமே தெரிகிறது. அரசருக்கு உரிய ஆச்சரியம் இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்த நிம்மதி போய் இப்பொழுது பயம் வந்ததற்கான காரணம் என்ன என்று அமைச்சரிடம் கேட்டார்.
அதற்கு அமைச்சர் "ஒன்றும் இல்லை மன்னா அவனிடம் எதுவும் இல்லாத போது எதன் மீதும் பற்று இல்லாமல் இருந்தான். அவனிடம் நாம் கொண்டு வந்த சில பொற்காசுகளை விட்டுச் சென்ற பிறகு அதனை எடுத்துப் பாதுகாக்க வேண்டும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பயமும் குழப்பமும் அவன் உள்ள குடி புகுந்து விட்டது அவனுக்கே தெரியாமல் அவன் அந்த பொற்காசுகளின் மீது பற்று வைத்துவிட்டான் அதனால் அவன் நிம்மதியைத் தொலைத்துவிட்டான்."
மன்னர் "அவனிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறி கொடுத்த பொற்காசுகளை எல்லாம் பெற்றுக் கொண்டால் மீண்டும் அவன் நிம்மதியை அடைவானா." அமைச்சர் "இல்லை மன்னா அதற்கு வாய்ப்பு இல்லை அவன் வாழ்நாளில் பொற்காசுகளைப் பார்த்திருக்க மாட்டான் அப்படிப்பட்ட ஒன்றை இது உன்னிடம் நாங்கள் செய்த விளையாட்டு என்று கூறிப் பெற்றுக் கொண்டால் அதை இழந்ததற்காகக் காலம் முழுக்க மன சங்கடத்திலேயே நிம்மதி இழந்து வாழ்வான் அதனால் இதனை இத்துடன் முடித்து விடுவோம் மன்னா" என்று கூறி மன்னரும் அமைச்சரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார்.
மனிதன் எப்பொழுதும் தன்னில் எதையும் பிடித்துக் கொள்ளாமல் இயல்பாக இருக்கிறானோ அப்பொழுதே அவனிடம் மன நிம்மதி குடி கொண்டு விடுகிறது. அதை விட்டு ஏதாவது ஒன்றினை அடைய வேண்டும் என்ற பற்றினை தன்னுள் ஏற்றுக் கொள்ளும்போது மன நிம்மதியற்று அலையத் தொடங்குகிறான் என்று மன்னருக்கு அமைச்சர் கூறிச் சென்றார். இதைத்தான் புத்தர் 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார்.