Meaning Of Life Image Credits: Adobe Stock
Motivation

வாழ்வின் அர்த்தம்தான் என்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க!

நான்சி மலர்

வாழ்வின் அர்த்தம் மரணத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? மரணத்தை பார்த்தவர்களுக்குத்தான் வாழ்வின் அருமையை புரிந்து கொள்ள முடியும்.

வருடாவருடம் கல்லறை திருநாள் என்று ஒரு நாள் வரும். அப்போது கல்லறைகளுக்கு சென்று இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்திவிட்டு வர வேண்டும். அப்போது அங்கிருக்கும் கல்லறைகளை கவனித்தால் தெரியும். சிலர் 2 வயதில் இறந்திருப்பார்கள், சிலர்  20 வயதில் இறந்திருப்பார்கள். சிலர் 60 வயதில் இறந்திருப்பார்கள். குழந்தை, இளைஞர், முதியவர் போன்ற எல்லா வயதினருக்குமே இறப்பு என்பது வருகிறது. இதிலிருந்து பொதுவாக தெரியும் ஒரு விஷயம் என்னவென்றால், இறப்பு எல்லோருக்குமே வரக்கூடிய ஒரு நிகழ்வுதான். வயது மட்டுமே வேறுப்படுகிறது.

வாழ்க்கையை கிடைக்கும் தருணத்திலேயே வாழ்ந்து விட வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை, நாம் செலவழிக்கும் நேரம் என்று ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தை இதுபோன்ற கல்லறைகளைக் காணும் போது தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இதற்கு நடுவிலே எதுக்கு ஈகோ, சண்டை போன்ற ஒன்றிற்கும் உதவாத விஷயங்களை நாம் பிடித்து கொண்டு பெருமைப்பட்டு கொள்கிறோம் என்று நினைக்கையில் வேடிக்கையாக உள்ளது.

அடுத்து வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். ‘கோவில்களை விட மருத்துவமைனையில்தான் அதிகமாக வேண்டுதல் சத்தம் கேட்கும்’ என்று எங்கோ படித்த நியாபகம்.  வாழ்வதற்கு இன்னும் சிறிது காலம்தான் இருக்கிறது என்று மருத்துவரிடம் இருந்து வரும் வார்த்தையை கேட்ட பிறகே சிலருக்கு இதுவரை நாம் வீணடித்த வாழ்க்கையின் மகத்துவம் புரியும். ஒவ்வொரு நொடியின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டுமா? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை பாருங்கள் புரியும். வாழ்வின் இதுபோன்ற கசப்பான பகுதிகள்தான் நமக்கு எப்போதுமே விலை மதிப்பில்லாத பாடத்தை கற்று கொடுக்கிறது.

ஒரு தென்னை மரம் கூட தன் வாழ்நாளில் பல தென்னங்குலையை அடுத்தவர்களுக்கு கொடுத்துவிட்டு தன் பிறப்பை முழு அர்த்தத்துடன் வாழ்ந்து விட்டே செல்கிறது. அப்படியானால் மனிதப்பிறவி எடுத்த நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். நாம் பிறந்ததற்கான முழு அர்த்தத்துடன் வாழ வேண்டாமா?

நாம் பிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எதையோ தேடி ஓடுகிறோம். ஏதோ ஒரு தேடுதல் ஒன்றன்பின் ஒன்றாக நமக்கு வந்து கொண்டேயிருக்கிறது. எல்லோரும் செய்வதை நாமும் செய்து முடித்துவிட்டால் அந்த தேடுதல் ஓய்ந்துவிடுமா? தெரியவில்லை. இதற்குப் பிறகாவது தேடுவதை விடுங்கள். கையில் இருப்பதை வைத்து வாழுங்கள். எது நமக்கு சந்தோஷத்தை தருகிறதோ? அதுவே நம் வாழ்வின் அர்த்தத்தை நிர்ணயிக்கிறது.

நாம் இதுவரை சேர்த்து வைத்த பணம், காசு, பேர் எதுவுமேயில்லை. ‘இன்று, இப்போது, இந்த நொடி அவ்வளவுதான் நம் கைகளில் உள்ளது’ இதுதான் நிஜம் என்ற புரிதலை மட்டும் மனதில் விதைத்து கொள்ளுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT