நல்லவர்கள் தோல்வி அடைவதும் தீயவர்கள் வெற்றி பெறுவதும் ஏன்? இந்த மாதிரி தங்களுக்குள்ளும் மற்றவர்களிடமும் கேட்டுக் கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறவர்கள் பலர். இக்கேள்வியை பொதுவாக யார் யார் கேட்டுக் கொண்டு வருகிறார்கள் என்றால், எல்லாவற்றிலுமே தோல்வி கண்டவர்கள், எதிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் எதிர்பார்த்த வெற்றி அடைய முடியாதவர்கள், தோல்வியைக் கண்டு கண்டு துவண்டு போனவர்கள் தான். இவர்களுக்கு இவர்களைப் பற்றிய நினைப்பு என்னவென்றால் இவர்கள் நல்லவர்கள் மற்றவர்கள் கெட்டவர்கள். குறிப்பாக வெற்றி பெற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள்போல் நினைத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவு "என்ன இந்த இறைவன் கெட்டவர்களை வெற்றி அடைய வைத்து, நல்லவர்களை தோல்வி அடைய வைக்கிறான்" என்ற எண்ணம். அதோடு மட்டுமல்ல கெட்டவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து வாழவைக்கிறான். நல்லவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறான். இதுதான் இறைவன் நடத்தும் நாடகமா என நினைப்பார்கள்.
இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம் என்று அங்கலாய்த்துக் கொண்டு தாங்கள் வணங்குகின்ற இறைவன் மீது சலிப்பும் கோபமும் கொள்கிறார்கள். அவர்களை அறியாமலேமயே இதெல்லாம் ஏற்பட்டு விடுகிறது. அடுத்து வெற்றியாளர்களைக் கண்டாலே இவர்களுக்குள் ஒருவித வெறுப்பு, விரோதம், பொறாமை, கசப்பு, எரிச்சல் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவர்களை பொறாமைகள் கண் கொண்டு பார்ப்பது உள்ளுக்குள் எரிச்சல் அடைவதுமாக ஆகிவிடுகிறார்கள். அந்த எண்ணங்களே குணங்களே அத்தகைய செயலுக்கு ஆளாக்கி விடுகிறது. அதோடு விட்டபாடில்லை வெற்றியாளர்களின் பொருளாதார முன்னேற்றங்களைப் பார்த்து " இவர்கள் இறக்கும்போது இதையெல்லாம் கூடவா எடுத்துச் செல்லப் போகிறார்கள். இவர்கள் சம்பாதிப்பதை யாரோ சாப்பிட போகிறார்கள். இதனால் என்ன பிரயோஜனம்" என்று தன்னுடையஷ. கைமாலாகாத்தன்மை கொண்ட தத்துவத்தை பேசிக் காலம் தள்ளுவார்கள்.
இப்படி காலத்தை தள்ளுவதைவிட வெற்றியாளர் அந்த வெற்றியை அடைவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகலுமாக உழைத்திருப்பார்கள். எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். எவ்வளவு போராட்டங்கள், அவதூறுகள் அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதைப் பற்றியும், அதற்காக கிடைத்த சன்மானம்தான் இது என்று சிந்திக்க ஆரம்பித்தால் வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம் பற்றி தெளிவாக உணர முடியும். பிறகு அதே போன்ற வெற்றியையோ அதற்கு மேற்பட்ட வெற்றியையோ அடைய வழி வகையை தேட ஆரம்பிக்கலாம்.இதுதான் உண்மையான,முறையான,தெளிவான உழைப்பைத் கொண்டு செயல்பட வேண்டிய விதிமுறையாகும்.
காரணம் வெற்றி தோல்வி இறைவன் நிர்ணயிப்பது அல்ல. இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்குள் உள்ள மனமும், மனதின் ஆற்றலும், மன எண்ணத்தின் வேகமும், சரியான நோக்கமும், சரியான வழியும்தான். மற்றும் அதற்கேற்ற அவர்களது திறமையும், ஆக்கமும், ஊக்கமும், வைராக்கியமா ன உழைப்பும் தான் வெற்றியாளர்களை வெற்றி பெறச் செய்கிறது. எதிர்மறை நோக்கமும், சிந்தனையும் சொல்லும் செயலும் கொண்டவர்கள்தான் தொடர்ந்து தோல்வி அடைகிறார்கள் என்பதை உணரவேண்டும்.